கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளில் 24
பேர், 'அரசியல்' உள்ளிட்ட காரணங்களால் மதுரை, திருச்சிக்கு
பந்தாடப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சியினரின் அதிருப்திக்கு ஆளானதால், இந்த
டிரான்ஸ்பர் தோஷம் பிடித்திருப்பதாக கருதும் போலீசார், பட்டியலில் இன்னும்
எத்தனை பேர் உள்ளனரோ, என்ற கலக்கத்தில் உள்ளனர். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள
ஆட்சிமாற்றம், போலீசில் அடிமட்ட அதிகாரிகள் வரை ஆட்டம் காணச்செய்துள்ளது.
அ.தி. மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்கட்டமாக டி.ஜி.பி., -
ஏ.டி.ஜி.பி., - ஐ.ஜி.,கள் அள வில் இடமாற்றம் நிகழ்ந்தது. அடுத்து
டி.ஐ.ஜி.,கள், எஸ்.பி., கள், டி.எஸ்.பி.,கள் மாற்றப்பட்டனர். இந்த
டிரான்ஸ்பர் நடவடிக்கை தற்போது இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,கள் மட்டத்திலும்
தொடர்கிறது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பணியாற்றும்
இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., கள், எஸ்.எஸ்.ஐ.,கள் மண்டலம் விட்டு
மண்டலத்துக்கு பந்தாடப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, டி.ஜி.பி., அலுவலகமே
நேரடியாக பிறப்பித்துள்ளது. உடுமலை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள்
ரங்கநாதன் மற்றும் ரமேஷ்குமார், மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் கனகராஜ்,
கோமங்கலம் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் ஆகியோர், மதுரையை தலைமையிடமாக கொண்ட
தமிழக தென்மண்டலத்துக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளனர். கோவை, சாயிபாபாகாலனி
குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபாண்டியன், துடியலூர் இன்ஸ்பெக்டர்
சுகுமார், பொள்ளாச்சி கிழக்கு இன்ஸ்பெக்டர் அம்மாதுரை, இன்ஸ்பெக்டர் சாகுல்
அமீது ஆகியோர் மதுரை மாநகருக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், கோவை மாநகர்
மற்றும் புறநகர் மாவட்ட போலீசில் பணியாற்றிய எஸ்.ஐ., மற்றும்
எஸ்.எஸ்.ஐ.,கள் லட்சுமி, சித்ராதேவி, ஆனந்த ஜோதி, செல்வராஜ், தங்கவேலு,
முரளி, அம்சவேணி, சந்திரசேகரன், முனுசாமி, சம்பங்கி, உமாமகேஸ்வரி,
குமாரவேலு, சமுத்திரவேல், நடராஜ் உள்ளிட்ட 16 பேர் மதுரையை தலைமையிடமாகக்
கொண்ட தெற்கு மண்டல போலீசுக்கும், திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட மத்திய
மண்டல போலீசுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான டிரான்ஸ்பர்
உத்தரவையும் மாநில டி.ஜி.பி., அலுவலகமே நேரடியாக பிறப்பித்துள்ளது. இந்த
டிரான்ஸ்பர் உத்தரவின் பின்னணியில் அரசியல் காரணங்களும் இருப்பதாக போலீசார்
தெரிவிக்கின்றனர். டி.எஸ்.பி., ஒருவர் கூறியதாவது:இன்ஸ்பெக்டர்கள்,
எஸ்.ஐ., மற்றும் எஸ்.எஸ்.ஐ.,கள் மாற்றத்துக்கு நிர்வாக ரீதியான
காரணங்களும், அரசியல் காரணங்களும் கூறப்படுகின்றன. சட்டசபை தேர்தலின்போது
தி.மு.க.,வினர் வாக்காளருக்கு பணம் தருவதாக கூறி பல இடங்களிலும்
அ.தி.மு.க., வினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அது
தொடர்பாக போலீசிலும் புகார் அளித்தனர்.போலீஸ் அதிகாரிகளில் சிலர், இப்புகார் மனுக்கள் மீது நடுநிலையுடன்
நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும், தி.மு.க.,வினருக்கு சாதகமாக
செயல்படுகின்றனர் என்றும் அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன; எனினும்,
எவ்வித நடவடிக்கையும் மேற்கொள் ளப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின்,
சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்கள் பரிசீலனைக்கு
எடுக்கப்பட்டு, டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு,
டி.எஸ்.பி., தெரிவித்தார்.டிரான்ஸ்பருக்கு உள்ளான போலீஸ் அதிகாரி ஒருவர்
கூறுகையில், 'ஆளுங்கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல். ஏ.,கள் சிலர்,
பொய்யான அரசியல் சாய குற்றச்சாட்டுகளை கூறி எங்களை பந்தாட
காரணமாகியுள்ளனர். சட்டசபை தேர்தலின் போது உயரதிகாரிகளின் உத்தரவுப்படியே
செயல்பட்டோம். ஆனால், எங்களை மட்டும் காரணமாக்கி டிரான்ஸ்பர்
செய்துவிட்டனர்' என்றனர்.- நமது நிருபர் -