உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காந்திபுரம் சந்திப்பில் யூ டேர்ன் வேண்டவே வேண்டாம்!வாகன ஓட்டிகள் கடும் அவஸ்தை!

காந்திபுரம் சந்திப்பில் யூ டேர்ன் வேண்டவே வேண்டாம்!வாகன ஓட்டிகள் கடும் அவஸ்தை!

கோவை;காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே,கிராஸ்கட் ரோடு சந்திப்பு பகுதியில் ஏற்படுத்திஉள்ள 'யூ டேர்ன்' வசதி, வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்திஉள்ளது. 'யூ டேர்ன்' வசதி வேறு சில இடங்களில் வேண்டுமானால் வசதியாக இருக்கலாம். ஆனால், இங்கு அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு, பழைய நடைமுறையை கொண்டு வருவது புத்திசாலித்தனம் மட்டுமல்ல, வீண் விபத்துக்களையும் குறைக்கும்.காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே கிராஸ்கட் ரோடு சந்திப்பு உள்ளது; இங்குள்ள தானியங்கி சிக்னலில் வாகன ஓட்டிகள் காத்திருப்பதை தவிர்க்க, 'யூ டேர்ன்' வசதி செய்யப்பட்டது.தற்போது போக்குவரத்து போலீசாரின் பரிந்துரையை ஏற்று, செய்துள்ள மாற்றங்கள், வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.இதில், பஸ் ஸ்டாண்ட் எதிரே பயணிகள் மற்றும் வாகனங்கள் கடக்கும் வகையில், மேம்பாலத்துக்கு கீழ் இடைவெளி விடப்பட்டுள்ளது; அங்கு வரிசையாக இரும்பு மையத்தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்கள் திணறல்

இதேபோல், கிராஸ்கட் ரோடு சந்திப்பும் அடைக்கப்பட்டுள்ளது. நஞ்சப்பா ரோட்டில் வரும் வாகன ஓட்டிகள், கிராஸ்கட் ரோடு சந்திப்பை கடந்து, போலீஸ் குவார்ட்டர்ஸ் முன் வலதுபுறம் திரும்ப 'யூ டேர்ன்' வசதி செய்யப்பட்டுள்ளது; பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் திரும்ப முடியாமல் திணறுகின்றன.நுாறடி ரோடு சந்திப்பில் இருந்து வருவோர் நஞ்சப்பா ரோட்டுக்குச் செல்வதற்கு, கிராஸ்கட் ரோடு சந்திப்பில் இருந்த நேர் வழி அடைக்கப்பட்டு இருப்பதால், இடதுபுறம் திரும்பி, ஆர்.வி., ஹோட்டல் எதிரே உள்ள அண்ணாதுரை சிலை ரவுண்டானாவில் திரும்பி வந்தனர்.தற்போது, கழிப்பறைக்கு முன் திரும்பும் வகையில், 'யூ டேர்ன்' வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வரும்போது, அண்ணாதுரை சிலை ரவுண்டானாவில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.

மேலும் மேலும் சிரமம்

அதேபோல், அண்ணாதுரை சிலை ரவுண்டானாவில் இருந்து வருவோர் கிராஸ்கட் ரோட்டுக்குச் செல்ல வேண்டுமெனில், இடது புறம் திரும்பிச் சென்று காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் முன் வலதுபுறம் திரும்பி வர வேண்டியிருக்கிறது.கிராஸ்கட் ரோடு சந்திப்பில் இருந்த தானியங்கி சிக்னலுக்கு பதிலாக, தேவையின்றி, 'யூ டேர்ன்' வசதி செய்து, வாகன ஓட்டிகளை சிரமப்படுத்துகின்றனர்.வாகனங்கள் தேங்காமல் செல்வதற்காகவே, 'யூ டேர்ன்' வசதி செய்வதாக, சாலை பாதுகாப்பு குழுவினர் சொல்கின்றனர். ஆனால், வாகன ஓட்டிகளை தேவையின்றி, சற்றுத்துாரம் பயணிக்க வைத்து, அலைக்கழித்து, எரிபொருளை வீணாகச் செலவழிக்க வைக்கின்றனர்.'யூ டேர்ன்' வசதி செய்துள்ள ஒவ்வொரு இடத்திலும் சிரமம் ஏற்படுகிறது. அப்பகுதியில் வாகனங்களை ஒழுங்குபடுத்த, போக்குவரத்து போலீசாரும் நிறுத்தப்படுகின்றனர்.இதற்கு பதிலாக, காந்திபுரம் சந்திப்பில் இதற்கு முன்பு இருந்ததை போல், தானியங்கி சிக்னலை பயன்படுத்தி, போலீசாரை நிறுத்தினால், வாகன இயக்கம் முறையாக நடக்கும்; தேவையற்ற சிரமத்தை தவிர்க்கலாம். தற்போது செய்துள்ள மாற்றத்தால், விபத்து அபாயம் ஏற்பட்டிருக்கிறது.ஏனெனில், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு சந்திப்பை கடந்து வருவோர், சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் முன் வலதுபுறம் திரும்பும்போது, பஸ் ஸ்டாண்டில் இருந்து வரிசையாக பஸ்கள் வெளியே வருகின்றன.பார்க் கேட் ரவுண்டானா பகுதியில் இருந்து வாகனங்கள் வருகின்றன. மத்திய சிறைச்சாலை பெட்ரோல் பங்க்கில் இருந்து வாகனங்கள், ரோட்டை கடக்கின்றன. டவுன் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் ஊர்ந்து ஊர்ந்து வெளியே வருகின்றன.ஒரே நேரத்தில் பல வழிகளிலும் வாகனங்கள் சங்கமிப்பதால், விபத்து அபாயம் உருவாகியிருக்கிறது. உயிர் பலி ஏற்படுவதற்கு முன், போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழுவினர் மீண்டும் ஆய்வு செய்து, தேவையற்ற 'யூ டேர்ன்' வசதியை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ