| ADDED : மார் 28, 2024 10:51 PM
பொள்ளாச்சி:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆங்கில பாடத் தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் தெரிவித்துள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த, 26ம் தேதி துவங்கியது. இரண்டாம் தேர்வாக நேற்று ஆங்கிலத்தேர்வு நடந்தது. தேர்வு குறித்து, உடுமலை மலையாண்டிபட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கூறியதாவது:ஹரிசுதன்: ஆங்கில பாடத்தேர்வு சுலபமாக இருந்தது. பள்ளியில் பலமுறை பயிற்சி செய்த பகுதிகளாக வந்திருந்ததால், வினாக்களுக்கு தெளிவாக பதிலளிக்க முடிந்தது. பயமின்றி தேர்வை சிறப்பாக எழுதியுள்ளேன், அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.அருண்குமார்: தேர்வில் இலக்கணப்பகுதிகளில், சில வினாக்கள் குழப்பும் வகையில் கேட்கப்பட்டிருந்தன. இதனால், விடைகள் எழுதுவதில் சிரமம் ஏற்பட்டது. முந்தைய தேர்வு வினாத்தாள்களை வைத்து, பள்ளியில் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனால் வினாக்களை எளிதில் புரிந்து விடைகள் எழுத முடிந்தது.மகேஸ்வரி: ஆங்கில தேர்வு கடினமாக இருக்கும் என்று பயந்தேன். ஆனால், எளிமையாகத்தான் இருந்தது. அனைத்து பகுதிகளிலும் வினாக்கள் நேரடியாக கேட்கப்பட்டிருந்தன. முந்தைய ஆண்டு பொதுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் வந்திருந்ததாலும், பயிற்சி பெற்றிருந்ததாலும், விரைவாக விடை எழுத முடிந்தது. இத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.மிதுலாஸ்ரீ: தேர்வில் இலக்கண பகுதியில் மட்டும், சிறிது கடினமாக இருந்தது. ஆனாலும் விடை எழுதும் வகையில் தான் கேட்கப்பட்டிருந்தது. மற்ற அனைத்து பகுதிகளும் சுலபமாகவே இருந்தது. இனி வரும் தேர்வுகளில் கேள்விகள் ஈசியாக இருக்க வேண்டும்.மகிஷ்கா: வினாக்கள் எளிமையாகவும், நேரடியாகவும் கேட்கப்பட்டன. பாடங்களின் பயிற்சி வினாக்கள் அதிகம் இடம் பெற்றதால் மகிழ்ச்சியுடன் தேர்வை எழுதியுள்ளேன். இதற்கு நன்கு பயிற்சிகள் எடுத்ததால், விடை எழுத முடிந்தது. ஆங்கில பாடத்தில் கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.