உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரே நாளில் 16.2 செ.மீ., மழைசிறுவாணி 44 அடியை எட்டியது

ஒரே நாளில் 16.2 செ.மீ., மழைசிறுவாணி 44 அடியை எட்டியது

கோவை:சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், ஒரே நாளில், 16.2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது; நீர் மட்டம், 44 அடியாக உயர்ந்தது.கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணை, தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம், 50 அடி. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், அணையின் நீர் மட்டம் படிப்படியாக அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த, 26ம் தேதி மழையின் காரணமாக, நீர் மட்டமானது, 43.23 அடியாக உயர்ந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அடிவாரத்தில், 8.5, அணைப்பகுதியில், 16.2 செ.மீ., மழையும் பதிவாகியிருந்தது. இதையடுத்து அணையின் நீர்மட்டம், 44.08 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து, 10.158 கோடி லிட்டர் நீர், குடிநீருக்காக எடுக்கப்பட்டது.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே செல்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம், 45 அடியை ஓரிரு நாட்களில் எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது,' என்றனர்.கோவையை பொறுத்தவரை, கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மழை பெய்கிறது. இதன் காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குனியமுத்துார் அணைகட்டில் வெள்ளம் அதிகளவு வந்தது. இதன் காரணமாக கோவை குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ