உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விநாயகர் சதுர்த்தி விழாவில் 2240 சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தி விழாவில் 2240 சிலைகள் பிரதிஷ்டை

கோவை:விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கோவை மாவட்டத்தில், 2240 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய, போலீசார் அனுமதி அளித்துள்ளனர். நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து அமைப்புகள் மற்றும் பொது மக்கள் சார்பில், பொது இடங்கள் மற்றும் வீடுகளில் சிலை வைத்து வழிபாடு செய்கின்றனர். இதையடுத்து, கோவை மாநகர பகுதியில் 708 விநாயகர் சிலைகள், மாவட்ட பகுதியில் 1532 சிலைகள் என 2,240 சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில், சி.சி.டி.வி., கேமரா வைக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். சிலை வைக்கும் இடத்தில், போலீசார் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். மாநகரில் இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக, எந்த பிரச்னையும் ஏற்படாத வகையில் கொண்டாட வேண்டும் என, போலீசார் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கோவை மாநகர் பகுதியில், பொது மக்கள் தங்களின் வீடுகளில் பிரதிஷ்டை செய்துள்ள, சிறு சிலைகளை இன்று மாலை கரைக்க திட்டமிட்டுள்ளனர். இதேபோல், இந்து முன்னணி, பா.ஜ., இந்து மக்கள் கட்சி, பாரத் சேனா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள 397 சிலைகளை, செப்., 9ம் தேதி ஊர்வலமாக எடுத்துச்சென்று சிங்காநல்லுார் குளம், குனியமுத்துார் குளம், வெள்ளக்கிணறு குளம், குறிச்சி குளம் மற்றும் முத்தண்ணன் குளங்களில் கரைக்கப்படுகின்றன. விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள, 265 சிலைகள் செப்., 11ம் தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்படவுள்ளன. பாதுகாப்பு பணியில் 2500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !