உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூட்டுறவு பணியாளர்கள் நாள் 23 பேர் குறை தீர்க்க மனு

கூட்டுறவு பணியாளர்கள் நாள் 23 பேர் குறை தீர்க்க மனு

- நமது நிருபர் -திருப்பூர் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் பணியாளர் நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது; கூட்டுறவு சங்க பணியாளர் 23 பேர், தங்கள் குறைகளை சுட்டிக்காட்டி மனு அளித்தனர்.கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைகளுக்கு தீர்வுகாணும்வகையில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மண்டல அளவில் 'பணியாளர் நாள்' நிகழ்ச்சி நடத்தப்படும் என, மானிய கோரிக்கையின் போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்தார்.இதை கூட்டுறவு பணியாளர்கள் வரவேற்றனர். இந்நிகழ்ச்சி எப்போது நடக்கும் என ஆவலுடன் இருந்து வந்தனர்.இந்நிலையில்,திருப்பூர் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலக நான்காவது தளத்தில் உள்ள கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகத்தில் பணியாளர் நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் ராமகிருஷ்ணன், திருப்பூர் மண்டல இணை பதிவாளர் சீனிவாசன், ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் ரவி ஆகியோர், கூட்டுறவு பணியாளர்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்; அம்மனுக்கள் கூட்டுறவு துறை போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டன. கூட்டுறவு சங்கப்பணியாளர் 23 பேர், தங்கள் குறைகளை பதிவு செய்தனர்.கூட்டுறவு துறை திருப்பூர் சரக துணைப்பதிவாளர் தமிழ்ச்செல்வன், தாராபுரம் சரக துணை பதிவாளர் பழனிச்சாமி உள்பட அதிகாரிகள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் பங்கேற்றனர்.இணைபதிவாளர் சீனிவாசன் கூறுகையில், ''மனுக்கள் மீது, இரண்டு மாதத்துக்குள் தீர்வு காணப்படும். பணியாளர்கள், தாங்கள் இருப்பிடத்திலேயே, ஆன்லைனில், மனுவின் நிலை குறித்த விபரங்களை அறிந்துகொள்ளலாம்'' என்றார்.இதன் வாயிலாக, கூட்டுறவு சங்க பணியாளர்களின் கோரிக்கை தீர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !