பெ.நா.பாளையத்தில் திருட்டு3 பேர் கைது
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்த திருட்டுக்கள் தொடர்பாக, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சின்னமத்தம் பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் அங்குள்ள தோட்டத்தின் முன்புறம் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, தோட்ட வேலையாக உள்ளே சென்று திரும்பினார். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார்.சின்னமத்தம்பாளையம், பெரியார் நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 29. மேட்டுப்பாளையம் தனியார் மருத்துவமனையில் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததால், பார்க்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவில் இருந்த லேப்டாப், வெள்ளி காமாட்சி விளக்கு ஆகியவை காணாமல் போய் இருந்தது. இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், இத்திருட்டுக்களை நடத்திய தேனியை சேர்ந்த காசி, 21, அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, 28, ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த லேப்டாப், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.