உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆய்வகத்துக்கு ரத்த சாம்பிள் அனுப்ப  மாவட்டத்தில் 32 ஊழியர்கள் நியமனம்!

ஆய்வகத்துக்கு ரத்த சாம்பிள் அனுப்ப  மாவட்டத்தில் 32 ஊழியர்கள் நியமனம்!

கோவை;ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த மாதிரிகளை சேகரித்து, ஆய்வகங்களுக்கு எடுத்து செல்ல மாவட்டத்தில், 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.கிராமப் புறங்களில் உள்ள மக்கள் உடல்நிலை பாதிக்கப்படும் போது அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களையே நாடுகின்றனர். பெரிய பிரச்னை என்றால் மட்டுமே நகருக்குள் வந்து மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். அனைத்து வகை ரத்த பரிசோதனைகளும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வகத்தில் மேற்கொள்ள முடியாத பட்சத்தில் அங்கிருந்து அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். பண விரையம், நேர விரையம் உள்ளிட்ட காரணங்களால், பலர் தங்கள் மருந்துவ பரிசோதனைகளை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். இதனால், நோயாளிகள் அலைச்சல் இன்றி, தங்கள் ரத்தப் பரிசோதனை முடிவுகளைப் பெறவும், மருத்துவ பரிசோதனையை தொடரவும் கோவை மாவட்ட சுகாதாரத் துறை ஒரு புது முயற்சியை எடுத்துள்ளது.ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அரசு மருத்துவமனைகள், பிற ஆய்வகங்கள் மற்றும் கோவை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு, ரத்த மாதிரிகளை எடுத்துச் செல்லவும், சேகரிக்கவும் ஆட்களை நியமித்துள்ளனர். இதற்கென மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், 32 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரத்த மாதிரிகளை, ஆய்வகங்களுக்கு எடுத்து சென்று, முடிவுகளை சேகரித்து வந்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொடுத்து விடுகின்றனர்.இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சாம்பிள் சேகரிப்பு பணிக்காக, மாவட்டத்தில், 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, பயணச் செலவுகளின் அடிப்படையில் பணம் வழங்கப்படும். இந்த சேவை, கிராமப்புற மக்களுக்கு உதவியாக அமைந்துள்ளது. இதுவரை, 7500க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை