பொள்ளாச்சி லோக்சபா, உடுமலை தொகுதியில் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்கள் சோதனையின் போது, 4 இடங்களில், 3 லட்சத்து, 89 ஆயிரத்து, 650 ரூபாய் பறிமுதல் செய்து, தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.பொள்ளாச்சி லோக்சபா தொகுதி, உடுமலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால், வாகனச்சோதனையில், தேர்தல் விதி மீறி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு வருபவர்களிடமிருந்து, பணம் பறிமுதல் செய்து, தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் இரவு, நிலையான கண்காணிப்பு குழு - பி., அலுவலர் கார்த்திக் தலைமையிலான குழுவினர், தாராபுரம் - பொள்ளாச்சி ரோடு, குடிமங்கலம், கொள்ளுப்பாளையம் பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போது, தாராபுரம் பெரிய கடை வீதியைச்சேர்ந்த காளிமுத்து, உரிய ஆவணங்கள் இல்லாமல், கொண்டு வந்த, ஒரு லட்சத்து, 82 ஆயிரத்து, 650 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.* அதே போல், நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் செல்வகுமார் தலைமையிலான குழுவினர், உடுமலை - பொள்ளாச்சி ரோடு, ராகல்பாவி பிரிவு அருகே, வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போது, பொள்ளாச்சி கோலார்பட்டியைச்சேர்ந்த, அருள்குமார், 52 ஆயிரம் கொண்டு வந்ததை, அக்குழுவினர் பறிமுதல் செய்து, தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.* நேற்று, நிலையான கண்காணிப்பு குழு, அலுவலர் சுந்தரம், போலீசார் கோவிந்தராஜ், சந்தனமாரி குழுவினர், குடிமங்கலம், பத்ரகாளிபுதுார் பகுதியில், வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போது, மன்னார்குடியைச்சேர்ந்த, ரவிக்குமார், தேர்தல் விதி மீறி, வாகனத்தில் கொண்டு வந்த, 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்து, தாசில்தார் சுந்தரம் மற்றும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.* அதே போல், நீர்வளத்துறை உதவி பொறியாளர் விஜயசேகரன், எஸ்.ஐ., செந்தாமரைக்கண்ணன், அஜ்மல் ஹாரி, கனகுமணி தலைமையிலான, பறக்கும் படை குழுவினர், உடுமலை - பொள்ளாச்சி ரோடு, நல்லாம்பள்ளி பிரிவு அருகே, வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, காரில், பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தைச்சேர்ந்த, நடராஜன், தேர்தல் விதி மீறி கொண்டு வந்த, 85 ஆயிரம் ரூபாயை, பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். ஆனைமலை
வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், நிலையான கண்காணிப்பு குழு, பறக்கும் படை குழுவினர், தேர்தல் விதிமுறை மீறல் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில், ஆனைமலை அருகே, அம்பராம்பாளையம் பகுதியில், நிலையான கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது, அவ்வழியாக வாகனத்தில் வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்பன், சாமிதாஸ், ஜெயசீலன், லெனின், ரஜினிகாந்த் ஆகியோரிடம் முறையான ஆவணங்களின்றி இருந்த, 2 லட்சத்து, 74 ஆயிரத்து, 500 ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தி.மு.க.,வினர் மீது வழக்கு
லோக்சபா தேர்தல் தேதி அறிவித்த பின், கட்சி கொடி, கல்வெட்டு, பிளக்ஸ் மற்றும் தலைவர்கள் சிலை என அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளது. இதில், நெகமம் கோப்பனூர்புதூரில் ரோட்டின் இரு புறமும் தி.மு.க., கட்சிக்கொடிகள் அகற்றப்படாமல் இருந்தது.இதை கண்ட தேர்தல் பறக்கும் படையினர், உடனடியாக அகற்றக்கோரி நெகமம் போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும், இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, கட்சி கொடியை அப்புறப்படுத்த கட்சியினரை அறிவுறுத்தினர்.- நிருபர் குழு -