பாலக்காடு:பாலக்காடு அருகே, சித்தூர் ஆற்றில் சிக்கிய நான்கு பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூர் ஆற்றில் மழை காலத்தில் மீன் பிடித்து விற்பதற்காக, வெளியூர்களில் இருந்து நிறைய பேர் வந்து தங்கியுள்ளனர். நேற்று காலை மீன் பிடிப்பதற்காக, மைசூரை சேர்ந்த தம்பதி, லக் ஷ்மண், 70, மற்றும் தேவி, 67, அவர்களது மகன் சுரேஷ், 32, பேரன் விஷ்ணு, 19, ஆகியோர் சென்றனர்.வலை போட்டு மீன் பிடித்த பின், மதியம், 12:00 மணி அளவில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினர். இந்நிலையில், கனமழையால் மூலத்தறை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. இதனால், திடீரென நீர்வரத்து அதிகரித்து, ஆற்றின் நடுவே உள்ள பாறையில் நான்கு பேரும் சிக்கி கொண்டனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு படையினர், கயிறு மாற்றும் மீட்பு உபகரணங்கள் பயன்படுத்தி ஒரு மணி நேர முயற்சிக்கு பின், மதியம், 2:00 மணிக்கு நான்கு பேரையும் மீட்டனர். தகவல் அறிந்து மின்சார துறை அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ.,வுமான கிருஷ்ணன்குட்டி சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை ஒருங்கிணைத்தார்.ஆற்றில் சிக்கிய நான்கு பேருக்கும் எந்தவித உடல் நல பிரச்னையும் இல்லை. தகவல் கிடைத்ததும், உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு நான்கு பேரை காப்பாற்றிய, தீயணைப்பு படையினரை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி பாராட்டினார்.