உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தைகள் உலகில் துள்ளித்திரியும் ஆட்டுக்குட்டி!

குழந்தைகள் உலகில் துள்ளித்திரியும் ஆட்டுக்குட்டி!

உலக திரைப்பட விழாக்களில், குழந்தைகள் பற்றிய திரைப்படங்கள் தான் அதிகம் திரையிடப்பட்டு, விருதுகளை பெறுகின்றன. தமிழ் சினிமாவில் குழந்தைகள் பற்றி திரைப்படங்கள் வருவது மிகவும் குறைவு.தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான திரைப்படங்களை எடுக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் இயக்குனர் ராம் கந்தசாமி, 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' என்ற குழந்தைகளுக்கான, ஒரு நல்ல திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.இந்த படத்தில், கோவை பட்டணத்தை சேர்ந்த சிவசங்கரன் - ஸ்வாதி தம்பதியின் மகள் பிரணிதி குழந்தை நட்சத்திரமாக, முக்கிய பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.ஆட்டுக்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் கிராமத்து பள்ளி சிறுமியாக நடித்து பிரணிதி அசத்தியிருக்கிறார்.இந்த படத்துக்கு, 'கிரவுன் உட் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவெல் அவார்டு' கிடைத்துள்ளது.பிரணிதியை சந்தித்து பேசினோம்...''நான் அல்வேர்னியா ஸ்கூல்ல ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். நல்லா டான்ஸ் ஆடுவேன். ஸ்கூல் டான்ஸ் போட்டியில் பிரைஸ் வாங்கி இருக்கேன். டைரக்டர் ராம் அங்கிள்தான் என்ன படத்துல நடிக்க வெச்சாங்க. என் கூட ஒரு ஆட்டுக்குட்டியும் நடிச்சு இருக்கு. அது பேரு புஜ்ஜி.அது ரொம்ப சூப்பரா, கியூட்டா நடிச்சிருக்கு. படம் வர்ற 31ம் தேதி ரிலீஸ் ஆகுது. படம் பார்க்க நாங்க சென்னைக்கு போறோம்,''என்றார்.படம் குறித்து, இயக்குனர் ராம் கந்தசாமி கூறியதாவது:குழந்தை பருவம் என்பது, அற்புதங்கள் நிறைந்த அதிசய உலகம். அந்த உலகத்தில் குழந்தைகளால் மட்டும்தான் வசிக்க முடியும். நாம் எல்லோரும் அந்த உலகத்தில் இருந்தவர்கள் தான்.குழந்தை பருவத்தை விட்டு நீங்கி, பருவம் அடையும் போது, நாம் அந்த அற்புத உலகத்தை விட்டு வெளியேறி விடுகிறோம். ஒரு பெண்ணின் குழந்தைப் பருவ நினைவுகளை மீட்டெடுக்கும், ஒரு சிறிய கதைதான் இந்தப்படம்.நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்க்கிறோம். ஆடு, மாடு போன்ற விலங்குகளையும் வளர்க்கிறோம். பூனை, நாய் அதன் இறுதி காலம் வரை, நம் வீட்டில் வாழ்கின்றன. குழந்தைகள் அவற்றுடன் அன்பு கட்டி விளையாடுகின்றனர்.ஆனால் ஆடு, மாடுகளை குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு விற்று விடுகிறோம். ஒரு ஆட்டுக்குட்டியை நேசித்து வளர்க்கும், குழந்தையின் கதைதான் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி.இவ்வாறு, அவர் தனது படத்தை சிலாகித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை