பொள்ளாச்சி;பொது இடங்களில் புகை பிடிப்போரை கண்டறிந்து, அபராதம் விதிக்கும் ஒருங்கிணைப்புக் குழுவினரின் நடவடிக்கை, முடங்கிக்கிடக்கிறது.தனிப்படை அமைத்து, பொது இடங்களில் புகை பிடிப்போர் மீது வழக்குப்பதிவு செய்யவும், பள்ளிகள் அருகில் உள்ள கடைகளில், திடீர் சோதனை நடத்தவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து, பொள்ளாச்சி நகரில், போலீஸ், சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம் பெற்ற, ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர், பொது இடத்தில் புகை பிடிப்போர் மீது நடவடிக்கை எடுத்து வந்தனர்.தவிர, பள்ளிகளைச்சுற்றி உள்ள கடைகளில் விதிமீறி விற்பனை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தும், விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுத்தும் வந்தனர்.அதிகாரிகள் ஒவ்வொருவரும், அபராத ரசீது புத்தகம் மற்றும் தொகை வைப்பதற்கான பணப் பையுடனே, நகர்புறங்களில் சுற்றி வந்தனர். ஆனால், இத்தகைய ஒருங்கிணைப்பு குழுவின் நடவடிக்கை முடக்கிக்கிடக்கிறது.பொது இடங்களில் புகைப் பிடிப்போரை கண்டறிந்து தடுக்க, அவர்கள் முனைப்பு காட்டுவதில்லை.இதனால், பஸ் ஸ்டாண்ட், மருத்துவமனை ஒட்டிய டீக்கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பல பகுதிகளில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், பலரும், புகை பிடித்து வருகின்றனர்.