| ADDED : மே 31, 2024 01:53 AM
கோவை;சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டினால் அவர்கள் மீதும், பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.கோவை காந்திபுரத்தில் மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கோவையை சேர்ந்த மேஜிக் நிபுணர் தயா கண்களை கட்டிக்கொண்டு, முகமூடி அணிந்தப்படி பைக் ஆம்புலன்சை ஓட்டினார். இதை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.இதைதொடர்ந்து, போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன் கூறியதாவது:போதிய பயிற்சி இருந்தால் கண்களை கட்டிக்கொண்டு, முகமூடி அணிந்தும் பைக்கை ஓட்டி சாதிக்கலாம். ஆனால், எவ்வளவு பயிற்சிகள் இருந்தாலும் ஹெல்மெட் அணியாமலும், மதுகுடித்தும் வாகனத்தை ஓட்டுவது பாதுகாப்பானது இல்லை.அதை பொதுமக்கள் உணர வேண்டும் என்பதற்காக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு, பெற்றோர் இருசக்கர வாகனத்தை வாங்கி கொடுக்கக் கூடாது. சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டினால் அவர்கள் மீதும், பெற்றோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை போலீசார் எளிதாக அடையாளம் கண்டு அபராதம் விதித்து வருகின்றனர். இதனால் சிலர் போதை பொருட்களை பயன்படுத்தி, வாகனம் ஓட்டுவதாக புகார்கள் வருகிறது. இதுபோன்ற நபர்களை பிடிக்க போக்குவரத்து போலீசார் அவ்வப்போது வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.