திருப்பூரில், தரமற்றவகையில் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட, 120 லிட்டர் குளிர்பானத்தை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.கோடை வெயில் சுட்டெரித்துவருகிறது. வெயில் தாக்கத்தை சமாளிக்க வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள், குளிர் பானங்களை வாங்கி பருகுகின்றனர்.திருப்பூரில், ரோட்டோரம் தற்காலிக தள்ளுவண்டி கடைகள் அமைத்தும், பேக்கரி, குளிர்பான கடைகளிலும், சர்பத், லெமன் ஜூஸ், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. குளிர் பானங்களை தரமானவகையில் தயாரித்து வழங்கவேண்டும் என, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினர், திருப்பூர் - காங்கயம் ரோடு, தாராபுரம் ரோடு, அவிநாசி ரோடு, பல்லடம் ரோடு பகுதி கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது.இந்த ஆய்வில், தயாரித்து பேக்கிங் செய்வதற்காக, சுகாதாரமற்றவகையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த, 110 லிட்டர் குளிர்பானம், தயாரிப்பு தேதி இல்லாத, 10 லிட்டர் ஐஸ் டியூப் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:குளிர் பானம் விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறிய, 4 குளிர் பானம், ஐஸ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் தயாரிப்புக்கு, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.நிறுவனங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கவேண்டும். பேக்கிங் செய்யப்படும் ஐஸ் பாக்கெட்டுகளில், தயாரிப்பு, காலாவதி தேதி உள்பட அனைத்து விபரங்களும் பொறிக்கப்பட்டிருக்க வேண்டியது கட்டாயம். ஐஸ்கிரீம் தயாரிப்புக்கு செயற்கை நிறமிகளை பயன்படுத்தக்கூடாது.பதப்படுத்துவதற்காக தயாரிக்கப்படும் ஐஸ்பார்கள் நீல நிறத்தில் இருக்க வேண்டும். ஐஸ்கிரீம், குளிர்பானங்களை சீரான வெப்பநிலையில், பிரிட்ஜில் சேமித்துவைத்து விற்பனை செய்யவேண்டும்.பொதுமக்கள், தயாரிப்பு, காலாவதி தேதி விபரங்கள் இல்லாத ஐஸ்கிரீம்கள், குளிர்பானங்களை வாங்கி பருகக்கூடாது. தரமற்ற குளிர்பானம் விற்பனை தொடர்பான விவரங்களை,, 94440 42322 என்கிற 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.- நமது நிருபர் -