ஸ்டிக்கர் அரசு என விமர்சித்ததால் அ.தி.மு.க., கவுன்சிலர் சஸ்பெண்ட்
கோவை : கோவை மாநகராட்சி மன்ற கூட்டத்தில், தி.மு. க., அரசை ஸ்டிக்கர் ஒட்டும் அரசு என அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன் விமர்சித்ததால், மூன்று கூட்டத்துக்கு 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில், மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது. புதிய மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார்.கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி பேசுகையில், ''சிங்காநல்லுார் குளத்துக்கு அருகே உள்ள ரோட்டை சீரமைத்து தர வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் தார் ரோடு போட திட்டமிடப்பட்டது. முன்னாள் அமைச்சர் பொங்கலுார் பழனிசாமி கல்லுாரிக்குச் செல்லும் வழி என்பதால், கிடப்பில் போட்டு விட்டார்கள்,'' என்றார்.உடனே எழுந்த அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன், ''நீங்கள் ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளாகி விட்டது; ரோடு போட்டிருக்க வேண்டியது தானே. எதற்கு அ.தி.மு.க., ஆட்சியை சொல்கிறீர்கள். அ.தி.மு.க., திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிதானே ஆட்சி நடத்துகிறீர்கள்,'' என்றார்.கோபமடைந்த மத்திய மண்டல தலைவர் மீனா, ''பாதாள சாக்கடை திட்டத்தையும், சூயஸ் திட்டத்தையும் கிடப்பில் போட்டது, அ.தி.மு.க., அவற்றை நாங்கள் (தி.மு.க.,) செயல்படுத்தி வருகிறோம். எங்கள் ஆட்சியை எப்படி ஸ்டிக்கர் ஒட்டுவதாக சொல்லலாம்,'' என்றார்.கவுன்சிலர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதத்தை, மேயர் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.அதைப்பாார்த்த மீனா, ''என்னங்க, நீங்க தி.மு.க., மேயர். நம்ம ஆட்சியை அ.தி.மு.க., கவுன்சிலர் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை கண்டிக்க வேண்டாமா. அவரை மூன்று கூட்டத்துக்கு 'சஸ்பெண்ட்' செய்யுங்கள். மன்றத்தில் இருந்து வெளியேற்றுங்கள்,'' என, வலியுறுத்தினார்.உடனே, உஷாரான மேயர் ரங்கநாயகி, ''அ.தி. மு.க., கவுன்சிலர் பிரபாகரன் மூன்று கூட்டத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்,'' என, அறிவித்தார்.
நல்லாட்சி என கூற முடியுமா'
அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது: திராவிட மாடல் ஆட்சி வந்தபின், மாநகராட்சியை குப்பையாக்கி வைத்திருக்கிறார்கள். இதை கேள்வி கேட்டதற்கு சஸ்பெண்ட் செய்கிறார்கள். திராவிட ஆட்சி சிறந்தது என, கவுன்சிலர்கள் கூறினர். ஆனால், ஒரு கவுன்சிலர் எழுந்து, 'நாய் பிடிக்கவில்லை' என்கிறார். நாய் பிடிக்க முடியாத ஆட்சியை, நல்லாட்சி என்று சொல்ல முடியுமா. மண்டல தலைவர் கூறியதால் என்னை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். மன்றத்தை மேயர் நடத்துகிறாரா; மண்டல தலைவர் நடத்துகிறாரா என தெரியவில்லை. மேயர் சீட் கேலிக்கூத்தாகி விட்டது. திராவிட ஆட்சியில் இப்பொறுப்பு சீரழிகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.