ஆனைமலை;நீர்நிலைகளில் எச்சரிக்கை பலகை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.ஆனைமலை அருகே ஆழியாறு சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்குள்ள அணை, பூங்கா மற்றும் கவியருவி காண உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர் சுற்றுலாப்பயணியர் அதிகளவு வந்து செல்கின்றனர்.ஆழியாறு பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணியர், அங்குள்ள ஆழியாறு பள்ளி வளங்கன் அணைக்கட்டுப்பகுதியில், ஆபத்தை உணராமல் குளிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அணைக்கட்டுப்பகுதியில், அடிக்கடி ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்கும் வகையில், எச்சரிக்கை செய்தாலும், ஆர்வமிகுதியில் அவர்கள் குடும்பத்துடன், சுழல், புதைமணல் உள்ள பகுதி என அறியாமல் குளிக்கின்றனர்.இங்கு கடந்த வாரம் சட்டக்கல்லுாரி மாணவர் ஒருவர் இறந்தார். இதையடுத்து, அப்பகுதியில் நீர்வளத்துறை சார்பில், வேலி அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஆனைமலை தாலுகா அலுவலகத்தில், நீர்நிலைகளில் எச்சரிக்கை பலகை அமைப்பது மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் சிவக்குமார் தலைமை வகித்தார்.கூட்டத்தில் காவல்துறை, நீர்வளத்துறை, பேரூராட்சிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ), பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சித்தலைவர்கள் பங்கேற்றனர்.அதிகாரிகள் கூறியதாவது:நீர்நிலைகளில், ஆபத்தை உணராமல் சுற்றுலாப்பயணியர் குளிப்பதை தடை செய்யும் வகையில் எச்சரிக்கை செய்வது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.அதன்படி, சம்பந்தப்பட்ட பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள் வாயிலாக, ஆறு, அணைக்கட்டு, குளம், குட்டைகள் ஆகியவற்றில் எச்சரிக்கை பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் அதிகம் கூடும் நீர்நிலைகளில் தடுப்பு வேலி அமைத்தல், பணியாளர்களை நியமனம் செய்து கண்காணிக்க வேண்டும்.காவல்துறை வாயிலாக, அனைத்து இடங்களிலும் வாகனத்தணிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.