உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயிகளுக்கு தெம்பு கொடுக்கும் கம்பு சாகுபடி அதிக மகசூல் பெற வேளாண்துறை அறிவுரை

விவசாயிகளுக்கு தெம்பு கொடுக்கும் கம்பு சாகுபடி அதிக மகசூல் பெற வேளாண்துறை அறிவுரை

பொள்ளாச்சி;'கம்பு சாகுபடி செய்து விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்,' என, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.தமிழகத்தில் நெல், சோளத்துக்கு அடுத்ததாக, உணவு பயிரானகம்பு பயிரிடப்படுகிறது. கம்பு, நீர்வளம், மண்வளம் குறைந்த இடங்களிலும், மானாவாரி நிலத்திலும் செழித்து வளரக்கூடியது. அதில்,மாவுச்சத்து, புரதம், சுண்ணாம்பு, இரும்பு, பாஸ்பரஸ், தயமின், ரிப்ளேவின், நயசின் போன்ற உயிர்சத்துகள் நிறைந்துள்ளது.இதை கொண்டுமதிப்பு கூட்டு பொருளான லட்டு, முறுக்கு, பாயாசம், பனியாரம், சப்பாத்தி, கூழ், சத்துமாவு செய்வதுடன், இதன் தட்டு சிறந்த கால்நடை தீவனமாகவும் உள்ளது.

ரகம், பருவம்

வீரிய ஒட்டு ரகங்களான தன்சக்தி, கோ - 9, கோ - 10 போன்ற ரகங்கள் கம்பு பயிர் சாகுபடி முறைக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த ரகம், மானாவாரியில் ஆடி, புரட்டாசி பட்டம், இறைவையில் மாசி, சித்திரை பட்டங்களிலும் பயிரிடலாம்.

விதை அளவு

ஒரு ஏக்கருக்கு, 5 கிலோ விதை தேவைப்படும். விதைப்பு முறையை பொறுத்து விதை அளவு மாறுபடும்.ஒரு கிலோ விதையுடன் மெட்டலாக்சில், ஆறு கிராம் என்ற விகிதத்தில் விதைப்பதற்கு, 24 மணி நேரத்துக்கு முன், விதை நேர்த்தி செய்ய வேண்டும். அல்லது விதைப்பதற்கு சற்று முன் அசோஸ்பைரில்லம் கலந்து விதைக்க வேண்டும்.விதைப்பு வரிசைக்கு வரிசை, 45 செ.மீ., இடைவெளியும், செடிக்கு செடி, 15 செ.மீ., இடைவெளியும் விட வேண்டும்.

உர அளவு

ஒரு ெஹக்டேருக்கு தொழு உரம், 12.5 டன், தழைச்சத்து 70கிலோ; மணிச்சத்து, 20 கிலோ என, அனைத்தும் அடியுரமாக இட வேண்டும். கம்பின் நுண்ணுாட்ட சத்து குறைபாட்டை தடுக்க, வேளாண் துறை வழங்கும் சிறுதானிய நுண்ணுாட்ட கலவை, 12.5 கிலோவை, 40 கிலோ மண்ணுாட்டம் கலந்து இட வேண்டும்.

களை நிர்வாகம்

கம்பு விதைத்த, 15, 30வது நாட்களில் களையெடுக்கும் நேரத்தில் பயிருக்கு பயிர், 15 செ.மீ., இடைவெளி இருப்பது போல் களை எடுக்க வேண்டும். அல்லது களை கொல்லி வாயிலாக கட்டுப்படுத்த விதைத்த, மூன்றாம் நாள் மற்றும், 25 - 30 நாட்களில், அட்ரசின், 250 கிராமை, 500 லிட்டர் நீரில் கலந்து மண்ணில் ஈரப்பதம் இருக்கும் போது தெளிக்க வேண்டும்.

பயிர் மேலாண்மை

குருத்து ஈக்களை கட்டுப்படுத்த, 5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு தெளிக்க வேண்டும். கதிர் நாவாய் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க, 750 கிராம் கார்பரில், 50 எஸ்.பி., ஐந்து சதவீதம் மாலத்தியான் ஆகியவை பூவெடுக்கும் சமயத்தில் துாவ வேண்டும்.தண்டு துளைப்பான் போன்ற புழுக்களை கட்டுப்படுத்த, விளக்கு பொறி, இனகவர்ச்சி பொறி, ஒரு ஏக்கருக்கு, 12 நிறுவ வேண்டும். அடிச்சாம்பல் நோயை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு, 500 கிராம் மெட்டாலாக்சில் அல்லது ஒரு கிலோ மேன்கோசெப்பை 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.தேன் ஒழுகல் நோயினை கட்டுப்படுத்த மெட்டாலக்சில் அல்லது கார்பெண்டசிமை பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும். துருநோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு நனையும் கந்தகம், 2.5 கிலோ அல்லது மேன்கோசெப் ஒரு கிலோ தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால், 10 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.

அறுவடை

இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தை தரும். தானியங்கள் கடினமாகும். அப்போது, கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும். ஒரு வாரம் கழித்து தட்டையை வெட்டி நன்கு உலர வைத்து சேமிக்க வேண்டும்.

மகசூல்

இந்த முறையில் கம்பு பயிரிட்டால், மானாவாரியாக, 1.5 - 2.5 டன்னும், இறவையாக, 2.5 - 3.5 டன் வரை மகசூல் பெறலாம். தற்போது கம்பு விதை, 1,764 கிலோ இருப்பில் உள்ளது. மேலும், விபரங்களுக்கு உழவர் செயலி அல்லது வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம்.இத்தகவலை, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பெருமாள்சாமி, தேசிய உணவு மற்றும் ஊட்ட சத்து திட்டத்தின் தொழில்நுட்ப உதவியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ