கோவை : கோவையில் நேற்று இரண்டாவது நாளாக நடந்த, ராணுவ கண்காட்சியில், திரளான பொதுமக்கள், மாணவ, மாணவியர் பங்கேற்று, ராணுவத்தினரின் சாகசம் கண்டு வியந்தனர்.'டிபன்ஸ் இன்னொவேஷன் மற்றும் அடல் இன்குபேஷன் மையம் (சி.டி.ஐ.ஐ.சி.,) மற்றும் இந்திய ராணுவம் சார்பில், 'சதர்ன் ஸ்டார் ஆர்மி அகாடமி இண்டஸ்ட்ரி இன்டர்பேஸ்' எனும் கண்காட்சி, கோவை கொடிசியா வளாகத்தில் நேற்றுமுன்தினம் துவங்கியது. முதல் நாளே திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.நேற்றும் காலை 10:00 மணியிலிருந்து மாலை 4:30 வரை கண்காட்சி நடந்தது. காலை முதலே, பொதுமக்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்தனர்.இந்திய ராணுவம் குறித்து பொதுமக்கள் அறிந்துக் கொள்ளும் வகையில், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், பீரங்கிகள், வெடிகுண்டுகள் உட்பட பல்வேறு உபகரணங்கள் குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ராணுவ தளவாடங்கள், விதவிதமான துப்பாக்கிகள் பயன்படுத்தும் முறை குறித்து, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.ராணுவ இசைக்குழுவினரின் பேண்ட் வாத்தியம் கவர்ந்தது. 110 காலாட்படை பட்டாலியன், 122 காலாட்படை பட்டாலியன், 35வது பீல்டு ஆர்டிலரி ரெஜிமென்ட், 12வது மெட்ராஸ் ரெஜிமென்ட் படையினர் சாகசங்களை வெளிப்படுத்தினர்.போர் சூழலில், பீரங்கிகளை எப்படி கையாள்வது, எதிரிகளை வீர, தீரத்துடன் விரட்டும் முறை, வீட்டுக்குள், தீவிரவாதிகள் பதுக்கிக் கொண்டால், அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து, ராணுவ வீரர்கள் பயிற்சி ஒத்திகை நடத்தி, சிலிர்க்க வைத்து, கைத்தட்டல்கள் பெற்றனர். கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் உட்பட அதிகாரிகள், ராணுவ வீரர்களின் சாகசங்களை வெகுவாக ரசித்தனர். கண்காட்சியில் இடம்பெற்ற பல்வேறு வகையான கல்வி நிறுவன அரங்குகளில், மாணவர்களின் கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து, பார்வையாளர்களுக்கு விளக்கப்பட்டது. நேற்றுடன் கண்காட்சி நிறைவு பெற்றது.
-சிறப்பான வாய்ப்பு
மாணவி ஜனார்த்திகா கூறுகையில், ''விதவிதமான துப்பாக்கிகள், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கினர். போரின் போது கடைபிடிக்கப்படும் நடைமுறை, பாதுகாப்பு அம்சங்கள் வேறு லெவல். ராணுவத்தினரின் பெருமை குறித்து அறிந்துக் கொள்ள சிறப்பான வாய்ப்பு இது,'' என்றார்.
சிறந்த வர்த்தக வாய்ப்பு
டிபன்ஸ் இன்னொவேஷன் மற்றும் அடல் இன்குபேஷன் மைய (சி.டி.ஐ.ஐ.சி.,) இயக்குனர் சுந்தரம் கூறுகையில், ''ராணுவத்தின் தேவைகளை தொழில் துறையினர் தெரிந்துக் கொள்ளும் அதே வேளையில், ராணுவ தளங்களுக்கு தேவையானதை தொழில் துறையினரிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் வர்த்தக வாய்ப்புக்கும், இக்கண்காட்சி வாயிலாக வழி ஏற்படுத்தப்பட்டது. பாரத் டைனமிக்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் உட்பட நிறுவனத்தினர் பங்கேற்று, வர்த்தக வாய்ப்பு குறித்து கலந்துரையாடினர்,'' என்றார்.