நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா
வால்பாறை;டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி தமிழக அரசின் சார்பில், ஆண்டு தோறும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.வால்பாறையில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற உருளிக்கல் எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியர் வசந்தகுமாருக்கு, சோலையாறு அணை அரசு மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். சோலையாறு அணை பள்ளியின் முன்னாள் மாணவரும், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருமான வசந்தகுமார் பேசியதாவது:'தினமலர்' நாளிதழ் சார்பில், கடந்த ஆண்டு லட்சிய ஆசிரியர் விருது பெற்றேன். தொடர்ந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த நிலையில், தற்போது இந்த ஆண்டு மாநில நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.ஓய்வு பெற்ற ஆசிரியர்களான எனது பெற்றோர்களின் கனவு நிறைவேறியுள்ளது. மாணவர்களிடையே உற்சாகம் ஏற்படுத்தும் வகையில், பள்ளி அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசும் வழங்கியுள்ளேன். பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் உயர தொடர்ந்து பாடுபடுவேன். இவ்வாறு, பேசினார்.முன்னாள் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.