தடை மீறி விநாயகர் சிலை பிரதிஷ்டை இ.ம.க., அர்ஜுன் சம்பத் பேட்டி
அன்னூர்:''விநாயகர் சிலை வைக்க அனுமதி தராவிட்டால், தடையை மீறி பிரதிஷ்டை செய்யப்படும்,'' என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அன்னூரில் தெரிவித்தார்.இந்து மக்கள் கட்சி சார்பில், கோவை மாவட்டம் அன்னூர் வட்டாரத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 60 இடங்களில் விநாயகர் சிலை வைக்க, இரு வாரங்களுக்கு முன்பே, காவல்துறை மற்றும் வருவாய்த் துறையிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. புதிதாக சிலை வைக்க, அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அனுமதி மறுத்து விட்டன.இதை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க, அக்கட்சியினர் நேற்று, அன்னூர் ஓதிமலை ரோட்டில் திரண்டனர். போலீஸ் அனுமதி மறுத்ததால், தடை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது.டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,கள் என 50, போலீசார் பாதுகாப்புக்கு திரண்டனர். விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கக் கோரி, கோஷங்கள் எழுப்பினர்.இ.ம.க., தலைவர் அர்ஜுன் சம்பத் பேசுகையில், கடந்த ஆண்டும் கடைசி நாள் வரை, இழுத்தடித்து அனுமதி தரவில்லை. இந்த ஆண்டு அனுமதி தராவிட்டாலும், தடையை மீறி அன்னூர் வட்டாரத்தில், 60 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்,'' என்றார்.டி.எஸ்.பி., பாலாஜி முன்னிலையில், பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மேலதிகாரிகளிடம் பேசி, விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக, உத்தரவாதம் தரப்பட்டது. இதையடுத்து, இந்து மக்கள் கட்சியினர் கலைந்து சென்றனர்.