உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொது இடங்களில் புகை பிடித்தால் இனி கைது! மாநகர போலீஸ் கடும் எச்சரிக்கை

பொது இடங்களில் புகை பிடித்தால் இனி கைது! மாநகர போலீஸ் கடும் எச்சரிக்கை

கோவை;பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக இருவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் புகையிலை பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டம்,2003 அமலில் இருந்தாலும், அவற்றை அரசு தீவிரப்படுத்தாததால், தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருகிறோம்.பஸ் ஸ்டாண்ட், பேக்கரி என, பொது இடங்களில் சிகரெட், புகையிலை பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. புகை பிடிப்பவர்களால், புகை பிடிக்காதோருக்கும் சுவாச கோளாறு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக, 2008ம் ஆண்டு முதல் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

காற்றில் 'ஊதிய' உத்தரவு

விதிமீறி புகை பிடித்தால் குற்றமாக கருதி, ரூ.200வரை அபராதம் விதிக்கப்படுகிறது. துவக்கத்தில் மட்டும் பின்பற்றப்பட்ட இந்த உத்தரவு, நாளடைவில் காற்றில் பறந்துவிட்டது. இதை யாரும் பெரிதாக கண்டுகொள்வதும் இல்லை.கேள்வி கேட்காததும் விதிமீறல் தொடர முக்கிய காரணமாக அமைகிறது.இதுவே புகையிலை பொருட்கள் விற்போருக்கு, சாதகமாக அமைந்து விடுகிறது.பள்ளிகளில் இருந்து, 100 மீட்டர் சுற்றளவில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது என்று விதிகள் இருந்தும், மாணவர்களை குறிவைத்து விற்பது நடக்கிறது. கடும் நடவடிக்கை இல்லாததே இதற்கு காரணம்.

களமிறங்கியது போலீஸ்!

இந்நிலையில், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தகாட்டூர் போலீஸ் எஸ்.ஐ., அய்யாசாமி தலைமையிலான போலீசார், ராம் நகர், காந்திபுரம் பகுதிகளில் பொது இடங்களில் புகை பிடித்த விருதுநகரை சேர்ந்த ராமகிருஷ்ணன், 59 மற்றும் ராம்நகரை சேர்ந்த மனோகரன், 60 ஆகியோரை கைது செய்தனர்; பின்பு ஜாமினில் விடுவித்தனர்.இதுவரை வெறும் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கைது நடவடிக்கை என்பது விதிமீறலுக்கு 'செக்' வைப்பதுடன், ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில், பொது மக்களுக்கும் நிம்மதியை தந்துள்ளது.

எப்.ஐ.ஆர்., பதிவு!

போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புகையிலை பொருட்களுக்கு தடை இருந்தும், கடைகளில் விதிமீறி விற்கின்றனர். இதுவரை பொது இடங்களில் புகை பிடித்தோர் மீது, 'பெட்டி கேஸ்' மட்டுமே போடப்பட்டு வந்தது. தற்போது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில், கமிஷனர் உத்தரவின்படி, நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ