அத்தப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாட்டம்
கேரள மாநிலத்தில், நேற்று முன்தினம் ஓணம் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது.கேரள மாநிலத்தின் அருகில் உள்ள பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் வாழும் கேரள மக்களால், ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.வீடுகளின் முன் அத்தப்பூ கோலமிட்டும், சிறுவர்கள் மகாபலி மன்னன் போன்று வேடமிட்டும் பண்டிகையை கொண்டாடினர். உற்றார், உறவினர்களுக்கு, ஓணம் விருந்து படைத்து அசத்தினர். அதேபோன்று, பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளிகளில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.* பொள்ளாச்சி சக்தி தொடர்பியல் மற்றும் மேலாண்மை கல்லுாரியில், ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. கல்லுாரி இயக்குனர் சர்மிளா (பொறுப்பு) தலைமை வகித்தார். தொடர்ந்து, மாணவியர் பலர், கேரள மாநில பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர். மாணவியர் ஒன்றிணைந்து, அத்தப்பூ கோலமிட்டு அசத்தினர். மாணவ, மாணவியரின் நடனம், பாட்டு, உறியடி மற்றும் பல்வேறு கலைநிகழ்சிகள் நடந்தது.* திப்பம்பட்டி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில் நடந்த ஓணம் கொண்டாட்டத்தில், கல்லுாரி தலைவர் சேதுபதி தலைமை வகித்தார். செயலாளர் விஜயமோகன், முதல்வர் வனிதாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஓணம் பண்டிகையின் வரலாற்றை குறிக்கும் வகையில் மகாபலி மன்னன் வேடமிட்டும், செண்டை மேளம் முழங்கியும், மாணவ, மாணவியர் ஆடல் பாடல் உடன் ஊர்வலமாக சென்றனர். குறிப்பாக, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஒன்றிணைந்து, திருவாதிரை நடனமாடி அசத்தினர். முடிவில், அனைவருக்கும் ஓணம் சத்தியா (விருந்து) வழங்கப்பட்டது.* உடுமலை அருகே, குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் விழா நடந்தது. நிகழ்ச்சியில், மாணவர்கள் பூக்களைக்கொண்டு ஆசிரியர்களின் உதவியால் பூக்கோலமிட்டனர்.பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் ஓணம் பண்டிகையை மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கொண்டாடினர். பள்ளி முதல்வர் மஞ்சுளாதேவி மற்றும் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர் - நிருபர் குழு -.