கோவை;ஆறு மாதங்களில் ரூ.31 லட்சம் அபராதம் விதித்தும், பிளாஸ்டிக் பயன்பாடு மாநகராட்சி பகுதிகளில் குறையவில்லை.ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், உணவை பாதுகாக்கவும், மேசைகள் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், பிளாஸ்டிக் பூச்சு கொண்ட டீ கப் ஆகியவற்றை இருப்பு வைத்தல், வினியோகம், விற்பனை மற்றும் இடம் மாற்றத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.இவற்றை உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்தவும், மத்திய, மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் கண்காணிக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகம் முழுதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, அந்தந்த உள்ளாட்சி அமைப்பினர் தனி குழு அமைத்து சோதனையை தீவிரப்படுத்தினர். கோவை மாநகராட்சியிலும், வார்டுக்கு ஒரு குழு அமைத்து, தீவிர சோதனை செய்யப்படுகிறது. சோதனையில் சிக்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது.கடந்த ஜன., 1 முதல், கடந்த, 12ம் தேதி வரையிலான காலத்தில், ரூ.31 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன் பாடு குறைந்ததாக தெரியவில்லை. மளிகை, இறைச்சி, பழக்கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பொருட்கள் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன. பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து, போதிய அளவில் விழிப்புணர்வு இல்லாதது தான், முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதைத்தடுக்க அபராத நடவடிக்கையை கடுமையாக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி பிளாஸ்டிக் ஒழிப்பு நோடல் அலுவலர் சலைத் கூறுகையில்,''பிளாஸ்டிக் ஒழிப்புக்காக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில், 10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. குறைந்தபட்சம், ரூ.100 முதல், ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். காகித கவர்கள், ஓட்டல்களில் இலை உள்ளிட்டவை பயன்படுத்த வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ''ஆனால், மக்கள் பிளாஸ்டிக் கவர்களை மறைத்து பயன்படுத்த வேண்டும் என்றே நினைக்கின்றனர். இப்போக்கு மாற வேண்டும். அப்போது தான் பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க முடியும்,'' என்றார்.