பி.ஏ.பி., கால்வாயில் அடைப்பு குடியிருப்புக்குள் புகுந்த தண்ணீர்
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையத்தில் உள்ள பி.ஏ.பி., கால்வாயில் சென்ற நீர், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கிணத்துக்கடவு, வரதனூர் ஊராட்சி செங்குட்டைபாளையம் கிராமத்தில் உள்ள, பி.ஏ.பி., கிளை கால்வாயில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் அருகே, 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.கால்வாயில் நேற்று முன்தினம் மாலையில், திடீர் அடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வெளியேறி, மண் ரோட்டில் தேங்கி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அருகில் உள்ள வீடு மற்றும் ஆட்டு கொட்டகைகளுக்குள் தண்ணீர் சென்றது.மக்கள் கூறியதாவது:கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வேறு வழியின்றி அருகில் உள்ளவர்கள் உதவியுடன் நீரை வெளியேற்றினோம். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தோம்.ஆனால், தற்போது வரை பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. கால்வாய் ஓரத்தில் உள்ள மண் ரோட்டில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் சென்று வர சிரமம் ஏற்படுவதுடன், பொதுமக்கள் மாற்று பாதையில் செல்கின்றனர்.ரோட்டில் வழிந்தோடும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் தற்போது குடியிருப்பு அருகே உள்ள தனியார் லே-அவுட்டில் வழிந்தோடுகிறது.இவ்வாறு, கூறினர்.