கோவை;'கிரெடாய்' அமைப்பு சார்பில், 'பேர் புரோ - 2024' கண்காட்சி, கோவையில் ஆக., 2 முதல், 4 வரை மூன்று நாட்கள் நடக்கிறது.இதுதொடர்பாக, 'இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் கூட்டமைப்பு' (கிரெடாய்) கோவை தலைவர் குகன் இளங்கோ, துணை தலைவர் அபிஷேக், பொருளாளர் ராஜிவ் ராமசாமி, 'பேர் புரோ' கண்காட்சி சேர்மன் சுரேந்தர் விட்டல் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:கோவையில் வசிக்கும் மக்களின், வீடு வாங்கும் கனவை நனவாக்கும் வகையில், 'பேர் புரோ' கண்காட்சி நடத்தப்படுகிறது; ஆக., 2ல் துவங்கி, 4ம் தேதி வரை மூன்று நாட்கள், கொடிசியா தொழிற்காட்சி வளாகம் - இ ஹாலில் நடக்கிறது. அனைத்து முன்னணி டெவலப்பர்கள் பங்கேற்கின்றனர்.வீட்டு மனையோ, வீடோ அல்லது 'பிளாட்' வாங்க நினைப்பவர்கள், இக்கண்காட்சிக்கு வருகை தருவது சிறப்பானதாக இருக்கும்; நகரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது; உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வீடு கட்டும் எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு இதுவே சரியான தருணம்.எதிர்காலத்தில் அவிநாசி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் போன்ற நகரங்கள், கோவையோடு இணையும் அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது; அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.நிலத்தில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். நிலத்தின் தேவை அதிகரித்திருப்பதால் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது.எனவே, மனையோ, வீடோ வாங்க நினைப்பவர்கள், தள்ளிப்போடாதீர்கள். நாட்கள் செல்ல செல்ல மதிப்பு கூடிக்கொண்டே இருக்கும்; விலை அதிகரிக்கும். கண்காட்சிக்கு வந்து பாருங்கள்; மனை, வீடு வாங்கும் எண்ணத்துக்கு அடித்தளமிடலாம்; இந்தாண்டு, 10 ஆயிரம் பார்வையாளர்களை எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.ஸ்டேட் பாங்க் ஆப் இண்டியா உதவி பொது மேலாளர் (வீட்டு கடன்) ராஜா கூறுகையில், ''வீடு, மனை வாங்குவதற்கு எஸ்.பி.ஐ., கடன் வழங்க தயாராக இருக்கிறது. ஆவணங்கள் சரியாக இருப்பின், இரண்டே நாட்களில் 'அப்ரூவல்' கிடைக்கும். கடந்தாண்டில் மட்டும், 2,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது; 5,000 வாடிக்கையாளர்கள் பயன் அடைந்திருக்கின்றனர். 8.5 சதவீத வட்டிக்கு கடனுதவி செய்கிறோம். வீடு தேடிச் சென்று சேவை செய்வதற்கு 'டீம்' இருக்கிறது,'' என்றார்.