உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலைவாழ் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள்; திட்ட மதிப்பீடு தயாரிக்கும் அரசுத்துறைகள்

மலைவாழ் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள்; திட்ட மதிப்பீடு தயாரிக்கும் அரசுத்துறைகள்

உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள, மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் வகையில், திட்ட மதிப்பீடு தயாரித்து வழங்குமாறு, அரசுத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், உடுமலை, அமராவதி வனச்சரக பகுதிகளில், பொருப்பாறு, ஆட்டுமலை, கரட்டுபதி, தளிஞ்சி வயல், மேல் குருமலை, பூச்சிக்கொட்டாம்பாறை,திருமூர்த்திமலை, ஈசல்திட்டு, கோடந்துார், தளிஞ்சி, குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, கருமுட்டி, கரட்டுபதி ஆகிய, 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாத மலைவாழ் மக்கள், 6,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.மலைவாழ் மக்கள் அடர்ந்த வனப்பகுதிகளில், அடிப்படை வசதிகள் இல்லாமல், தேன், நெல்லி, வடுமாங்காய் உள்ளிட்ட வனப்பொருட்களை சேகரித்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட விவசாய நிலங்களில், மொச்சை, தட்டை உள்ளிட்ட பயிர் சாகுபடி மேற்கொண்டும் வருகின்றனர்.இப்பகுதிகளில் விளையும் தைலப்புல் அறுத்து, அதனை காய்ச்சி, தைலம் தயாரித்தும் விற்பனை செய்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் இல்லை

ரோடு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், மலைவாழ் மக்கள் அவசர மருத்துவ தேவைக்கு கூட, கரடு, முரடான மலைப்பாதைகளில் தொட்டில் கட்டி துாக்கி வரும் நிலை உள்ளது.உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காத நிலையில், முதியவர்கள், கர்ப்பிணிகள் என பலர் பலியாகி வரும் சம்பவங்களும் நடந்து வருகிறது.இந்நிலையில், திருமூர்த்திமலை முதல், குருமலை வரை, வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில், மண் ரோடு அமைக்க, ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், அப்பணிகளும் பல்வேறு காரணங்களினால் இழுபறியாகி வருகிறது.மேலும், குடிநீர், ரோடு, தெரு விளக்கு வசதியில்லாத நிலையில், குழந்தைகள் கல்விக்கு ஆரம்ப பள்ளிகள் போதிய அளவு இல்லை. மேலும், இருக்கும் பள்ளிகளுக்கும் உரிய போக்குவரத்து வசதி இல்லாததால், ஆசிரியர்களும் சரியாக வருவதில்லை.அதே போல், ஆரம்ப நிலை மருத்துவம் கிடைக்கும் வகையில், சின்னாறு மற்றும் மாவடப்பு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், அப்பணியும் இழுபறியாகி வருகிறது.

கலெக்டர் அறிவுறுத்தல்

இந்நிலையில், மலைவாழ் மக்களுக்கு வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து, வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாவட்ட சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் பொறியியல் துறை, தளி பேரூராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகம் வாயிலாக, தேவையான திட்ட பணிகள் மற்றும் அதற்கான நிதி தேவை குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வழங்கவும், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் வாயிலாக, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.இதில், மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், குடிநீர் வசதி, ரோடு வசதி, சோலார் மின் விளக்கு வசதி, மயானத்திற்கு செல்லும் வழித்தடம், சமுதாய நலக்கூடம், விவசாய நிலங்களில் சிறு பாசன வசதி.ஆரம்ப பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வசித்து வரும் வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுதல் என பணிகள் மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கையும் மற்றும் திட்ட மதிப்பீடு தயாாரித்து வழங்குமாறு கூறியுள்ளார்.எனவே, திட்ட அறிக்கை மற்றும் திட்ட மதிப்பீடு தயாரிப்பதோடு, நிறுத்தி விடாமல், மலைவாழ் மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதே மலைவாழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ