கோவை:மாவட்ட கூடைப்பந்து ஆண்கள் காலிறுதிப் போட்டியில், சிறப்பாக விளையாடி கே.பி.ஆர்., மற்றும் யுனைடெட் அணிகள் அரையிறுதிக்கு, தகுதி பெற்றன. கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் விங்ஸ் கூடைப்பந்து கழகம் சார்பில், 'பிரீடம் டிராபி' கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி, கோவை மாவட்ட கூடைப்பந்து கழக மைதானத்தில் நடக்கிறது. மாணவ,- மாணவியருக்கு 14,17,19 வயது பிரிவுகளிலும் ஆண்களுக்கு, ஓபன் பிரிவிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஆண்கள் பிரிவு காலிறுதி போட்டியில், யுனைடெட் கூடைப்பந்து அணி, 61 --- 48 என்ற புள்ளிக்கணக்கில், ராஜலட்சுமி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியையும்; கே.பி.ஆர்., ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, 50 -- 43 என்ற புள்ளிக்கணக்கில், 10 எக்ஸ் அணியையும் வீழ்த்தி, அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. 19 வயது மாணவர் பிரிவில் பெர்க்ஸ் பள்ளி அணி, 105 - 40 என்ற புள்ளி கணக்கில், சாவரா பள்ளியை வீழ்த்தியது. மாணவியர் 14 வயது பிரிவில், எஸ்.வி.ஜி.வி., பள்ளி அணி 65 - 10 என்ற புள்ளி கணக்கில், பீபால் பள்ளி அணியையும், தி என்.ஜி.பி., பள்ளி அணி, 44 - 6 என்ற புள்ளி கணக்கில், பி.எஸ்.ஜி., சர்வஜனா பள்ளியையும் வீழ்த்தின.