| ADDED : மே 01, 2024 01:02 AM
தொண்டாமுத்தூர்:நல்லூர் வயலில், சிறுவாணி மெயின் ரோட்டை விரிவாக்கம் செய்ய மரத்தை வெட்டக்கூடாது என, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் மேற்கு புறநகர் பகுதியில், சிறுவாணி மெயின் ரோடு முக்கிய சாலையாக உள்ளது. நல்லூர் வயல், சிறுவாணி மெயின் ரோட்டின் ஓரத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அரச மரத்தில், நெடுஞ்சாலைத்துறை யினர் மஞ்சள் வண்ண பெருக்கல் குறியீடு செய்துள்ளனர்.சாலை விரிவாக்கம் செய்து, இந்த மரத்தை வெட்டவே, மரத்தில் குறியீடு செய்துள்ளனர். ஏற்கனவே மரங்கள் அழிந்ததால், மழையின்றி தவித்து வருகிறோம். பல ஆண்டுகளாக உள்ள மரத்தை வெட்ட விடமாட்டோம் என, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'சிறுவாணி மெயின் ரோட்டில், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க சிறுவாணி மெயின்ரோட்டை, 10 மீட்டர் சாலையாக விரிவாக்கம் செய்து வருகிறோம். நல்லூர் வயல் பகுதியில், 7 மீட்டர் சாலையே உள்ளது.இதை, 10 மீட்டர் சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை, அளவீடு செய்துள்ளோம். முறையாக திட்டம் தயாரித்து, அரசிடம் அனுமதி பெற்ற பின்பே விரிவாக்கப்பணி மேற்கொள்வோம். சாலையின் இருபுறமும் தலா, 1.5 மீட்டர் மட்டுமே விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால், மரங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்றனர்.மரத்தை காக்க திரண்ட மக்களே...இனி மகிழ்ச்சியாக இருங்க!