| ADDED : ஜூலை 22, 2024 02:53 AM
பெ.நா.பாளையம்:கோவை தடாகம் ரோடு, கணுவாய் அடுத்துள்ள மலைப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்ததால், அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.கோவை தடாகம் ரோட்டில் கணுவாயிலிருந்து திருவள்ளுவர் நகர் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வழியில், இடதுபுறம் உள்ள மலையில் கடந்த சில நாட்களுக்கு முன், கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. வனத்துறையினர், கருஞ்சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், கணுவாய் ஒட்டிய மலைப்பகுதியில் அடர்ந்த மரங்களுக்கு இடையே இரண்டு சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பது சமூக வலைதளங்களில் வெளியானது. சில மாதங்களுக்கு முன், இதே பகுதியில் உள்ள காளையனூர் தோட்ட பகுதியில் உள்ள நாய் மற்றும் ஆடுகள் இறந்து கிடந்தன. சிறுத்தை தாக்கி அவை இறந்திருக்கலாம் என, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறை சார்பில் 'ட்ராப் கேமரா' பொருத்தப்பட்டது. ஆனால், அதில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் பதிவுகள் எதுவும் இல்லை. கடந்த மாதம் திருவள்ளுவர் நகர் பகுதியில் மலையை ஒட்டியுள்ள வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த கோழியை கவ்வி சென்றது. இது தொடர்பான 'சிசிடிவி' பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.கோவை வனத்துறையினர் கூறுகையில், 'சம்பவம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றனர்.