தென்னை சாகுபடியில் புதுமையை புகுத்துங்க! உலக தென்னை தின விழாவில் அறிவுரை
ஆனைமலை:தமிழ்நாடு வேளாண் பல்கலை, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம் சார்பில், 'பொருளாதார சுழற்சிக்கு தென்னை அதிக மதிப்புக்கு கூட்டு வணிகம்' என்ற பொருளில், உலக தென்னை தின விழா, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது.ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சுதாலட்சுமி வரவேற்றார். வேளாண் பல்கலை தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதன்மையர் முனைவர் ஐரின் வேதமணி தலைமை வகித்து பேசுகையில், ''கோகோ, ஜாதிக்காய், குறுமிளகு, இலவங்க பட்டை போன்ற ஊடுபயிர்கள் கொண்டு, தென்னையில் பல்லடுக்கு சாகுபடி மற்றும் இயந்திரமயமாக்கல் போன்ற உத்திகளை கையாண்டு, விவசாயிகள் வருமானத்தை பெருக்க வேண்டும்.தென்னை உரி மட்டைகளில் இருந்து நார், கோகோ பித்தை பிரித்தெடுத்து மதிப்புக்கூட்ட வேண்டும். ஊடுபயிர்களை வளர்க்கும் போது வாடல் நோய் அண்டாத பயிர்களை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்ய வேண்டும். பூச்சி மற்றும் நோய்களுக்கு எதிர்பாற்றலை மேம்படுத்த விவசாயிகள், விஞ்ஞான முறையில் வேளாண்மையை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா பேசுகையில், ''நீர் மேலாண்மைக்கும், மதிப்புக்கூட்டலுக்கும் விவசாயிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தென்னை சார்ந்த பொருட்களின் ஏற்றுமதிக்கு கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர் அறவாழி பேசுகையில், ''21 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச தென்னை கூட்டமைப்பில், இந்தியா முக்கிய பங்களிப்பை வழங்குகிறது. பருவ நிலை மாற்றத்துக்கு ஏற்ப விவசாயிகள், தென்னை சாகுபடியில் புதுமையை புகுத்த வேண்டும்.தென்னை வளர்ச்சி வாரியமானது காசர்கோட்டில் அமைந்துள்ள மத்திய பனைப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் ஆராய்ச்சிகளில் பங்கு கொள்கிறது,'' என்றார்.தென்னை வளர்ச்சி வாரியத்தின் உதவி இயக்குனர் ரகோத்தமன், விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார். ஆனைமலை வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் கோபிநாத், தோட்டக்கலைத்துறையில் செயல்படுத்தும் தென்னை திட்டங்கள் குறித்தும், தென்னை வளர்ச்சி வாரிய ஆராய்ச்சிக்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், தென்னை விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு சாவல்கள், அதை எதிர்கொள்ளும் முறைகள் குறித்து விளக்கினர்.முன்னோடி விவசாயிகள், தென்னை சாகுபடியில் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். முனைவர் ராஜலிங்கம் நன்றி கூறினார்.தொடர்ந்து, டிராக்டர் கொண்டு வட்டப்பாத்தி அமைக்கும் இயந்திரம், வீச்சு களையெடுக்கும் இயந்திரம், பட்டைகளை துாளாக்கும் கருவி ஆகியவற்றின் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.