ஆனைமலை;பொள்ளாச்சி அருகே ஆழியாறு பகுதியில், பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளி கட்டடத்துக்கு சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையையொட்டி சின்னார்பதி பழங்குடியின மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த, 2008ம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பள்ளி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கியது.அந்த கட்டடம் சேதமடைந்ததால், தற்காலிகமாக மின்வாரிய குடியிருப்புக்கு மாற்றி அங்கேயே இயங்கி வருகிறது.இப்பள்ளியில் தற்போது, 70க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஒரு பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.கட்டட வசதியில்லாத பள்ளிக்கு, நிரந்தர கட்டட வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை எழுந்தது.இதற்காக அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர், கடந்த, 2019ம் ஆண்டு நவ.,14ம் தேதி, 25 சென்ட் பள்ளிக்கு என வழங்கப்பட்டது.அதன்படி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 24 லட்சம் ரூபாய் செலவில், சின்னார்பதி பழங்குடியின மாணவர்களுக்கான இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.தற்போது கட்டடப்பணிகள் முடிந்து, ஓவியங்களுடன் பெயின்ட் வரைந்து புதுப்பொலிவுடன் கட்டடம் காட்சியளிக்கிறது.கழிப்பிடம், குடிநீர் வசதி ஏற்படுத்தப்படாமல் இருந்த நிலையில், மாணவர்களின் வசதிக்காக தற்போது அந்த வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி பாதுகாப்பிற்காக சுற்றிலும் சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது.இந்த வசதியை ஏற்படுத்திதர வேண்டும் என பழங்குடியின மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பழங்குடியின மாணவர்களின் கல்வியை பெறுவதற்காக, போராடி நிதி பெறப்பட்டு கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், சுற்றுச்சுவர் வசதியில்லாததால், பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. அவ்வப்போது வனவிலங்குகள் வரும் சூழலில், சுற்றுச்சுவர் வசதியில்லாததால், அங்கு பள்ளியை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பழைய கட்டடத்தை காலி செய்ய வேண்டிய நிலை உள்ளதால், அதிகாரிகள், மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.