கோவை : ஏர் ஆம்புலன்ஸ் சேவை ரத்து செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.கோவை, ஆவாரம்பாளையம், காமதேனு நகரை சேர்ந்த நவீனா, குடும்பத்தினருடன் ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார். அப்போது, நவீனாவின் தாயார் கல்யாணி, 2021, ஆக., 28ல், நுரையீரல் வீக்கம் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் டில்லி வழியாக சொந்த ஊரான கோவைக்கு அழைத்து வருவதற்கு, ப்ளுனம் ஏர் நிறுவனம் வாயிலாக, ஏர் ஆம்புலன்சில் முன்பதிவு செய்தார்.இதற்காக, 15.4 லட்சம் ரூபாய் கட்டணம் கேட்டனர். கூகுள் பே வாயிலாக இரண்டு லட்சம் ரூபாய் முன் தொகை செலுத்தினார். ஆனால், ஏர் ஆம்புலன்ஸ் வரவில்லை. இது பற்றி அந்நிறுவனத்தினரிடம் கேட்ட போது, வானிலை காரணமாக, கோவைக்கு செல்ல வேண்டிய ஏர்ஆம்புலன்ஸ் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர். மாற்று ஏற்பாடு செய்வதாக கூறியும், எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அட்வான்ஸ் தொகையையும் திருப்பித் தரவில்லை. வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும், முறையான பதில் அளிக்காமல் காலம் கடத்தினர்.இதனால், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள், 'ஏர்ஆம்புலன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், பாதிக்கப்பட்ட மனுதாரரிடம் பெற்ற இரண்டு லட்சம் ரூபாயை திருப்பி செலுத்த வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 20,000 ரூபாய், வழக்கு செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.