பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சி அண்ணா நகர் சாக்கடை கழிவுநீர் பிரச்னைக்கு விடிவு கிடைக்காததால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சி, 8வது வார்டுக்கு உட்பட்டது அண்ணா நகர். 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தி மையமாக அந்த இடம் மாறியுள்ளதுடன், தொற்று நோய்களும் பரவுகின்றன.பல ஆண்டு காலமாக உள்ள இந்த பிரச்னைக்கு, பலமுறை இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும், நகராட்சி நிர்வாகத்தின் செவிகளுக்கு எட்டவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பெய்த கனமழைக்கு, கழிவுநீருடன் மழைநீரும் கலந்து வீடுகளின் முன் குளம் போல தேங்கி நின்றது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. வீட்டின் முன் குளம்
பொதுமக்கள் கூறியதாவது:அண்ணா நகர் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், முறையாக செல்ல வசதியில்லை.இதனால், குடியிருப்போர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.பலரும் துர்நாற்றத்தால், மூக்கை பொத்திக்கொண்டு செல்ல வேண்டியதுள்ளது. வீடுகள் முன் உள்ள கால்வாய்களில், குப்பை அடைத்து தேங்கும் கழிவு நீரால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறோம். கொசுத்தொல்லையால் நிம்மதியாக துாங்கக்கூட முடிவதில்லை.நான்கு ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. குளம் போன்று தேங்கும் கழிவுநீர், ரோடுகளில் வழிந்தோடுவதால் பொது சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆய்வு செய்யுங்க!
கழிவுநீர் தேங்காமல் முறையாக செல்லவும்; அதற்கேற்ப வழித்தடம் அமைத்து அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நகராட்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.இங்கு இருந்து செல்லும் கழிவுநீரை, தனியார் வீடு விற்பனையாளர் அடைத்து வைத்துள்ளார். நகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்ததில், இதற்கு ஒப்புதல் வழங்கவில்லை என தெரிகிறது.ஒரு மணி நேரம் பெய்த மழைக்கே கழிவுநீருடன், மழைநீரும் கலந்து வீட்டு முன் தேங்கி நிற்பதால், வீட்டை விட்டு வெளியேறவே போராடும் நிலை உள்ளது. பெரும் மழை பெய்தால், வீட்டுக்குள் மழை நீரும், கழிவுநீரும் புகுந்து விடும் அபாயம் உள்ளது.அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து, கழிவுநீர் தேங்காமல் செல்ல வழிவகை செய்ய வேண்டும். இல்லையெனில், கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். வரிவசூலில் அக்கறை!
பொள்ளாச்சி நகராட்சி, 9வது வார்டுக்கு உட்பட்ட சுப்பையன் நகரில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படாததால், மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.மழைக்கு சாக்கடை கால்வாயில் உள்ள கழிவுநீருடன், மழைநீரும் கலந்து வெள்ளமாக ஓடியது. கழிவுகள் அடித்து வரப்பட்டதால், கடும் துர்நாற்றம் வீசியது. இப்பிரச்னை குறித்து, நகராட்சி கமிஷனரிடம் நேற்று மனு கொடுத்து, தீர்வு காண வலியுறுத்தினர்.சுப்பையன் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:அண்ணா நகரில் இருந்து கழிவுநீர், தாழ்வாக உள்ள சுப்பையன் நகர் பகுதிக்கு வருகிறது. இங்கு இருந்து கழிவுநீர் செல்ல வசதிகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளது. கடந்த, 14 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை. சுகாதாரம் பாதிப்பு
கடும் துர்நாற்றத்துடன் கழிவுநீர் சென்றதால் மிகுந்த சிரமப்பட்டோம். பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் முறையீட்டும் இந்த பிரச்னைக்கு மட்டும் தீர்வு எட்டப்படவில்லை. கழிவுநீர் தேக்கத்தால், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது.பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் ஆங்காங்கே தேங்கி, பாட்டில்களும் நிறைந்து காணப்படுகின்றன. சாக்கடை கழிவுகள் தேங்குவதால், கொசுத்தொல்லை அதிகரிக்கிறது. மேலும், இங்கு புதிதாக வீடு கட்டுவோர், சாக்கடை கால்வாய் ஆக்கிரமித்து அடைத்ததாக தெரிகிறது. இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.வரியை மட்டும் முறையாக வசூலிக்கும் அதிகாரிகள், பிரச்னைக்கு தீர்வு காண அக்கறை காட்டாதது வேதனையாக உள்ளது.இவ்வாறு, கூறினர்.