மேலும் செய்திகள்
பரிதவிப்பு
23-Feb-2025
கோவை; தனியார் நிதி நிறுவனங்களில் பலர் பெயரில் கார் கடன், தனிநபர் கடன் பெற்று மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, எஸ்.பி.,அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், பல்லடம், கருவம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கோவை மாவட்ட எஸ்.பி., அலுவலகம் வந்தனர். தங்கள் பெயரில் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று கார்கள் வாங்கியும், தனிநபர் கடன் பெற்றும் மோசடி செய்த முரளி என்பவரை, கைது செய்ய வலியுறுத்தி மனு அளித்தனர்.கருவம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் கூறியதாவது:விசைத்தறி நடத்தி வருகிறேன். எங்கள் ஊரில் கோவில்பாளையத்தை சேர்ந்த முரளி என்பவர் குடியிருந்தார். எங்களிடம், 'கார் வாங்கி ஓட்டலாம்; வருவாய் கிடைக்கும்' எனத் தெரிவித்தார். வாடகை வீட்டில் இருப்பதால், அவர் பெயரில் கார் எடுக்க முடியாது எனத் தெரிவித்து, எனது பெயரில் கார் கடன் பெற்று, கார் வாங்கியதாக தெரிவித்தார்.காரை ஓட்டி, கிடைக்கும் வருவாயை பிரித்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார். ஆனால், காரை என்னிடம் காட்டவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காருக்கான தவணைத் தொகையை செலுத்தி வந்தார். எங்களுக்கு பணம் எதுவும் தரவில்லை.இத்துடன் எங்களது பெயரில் தனிநபர் கடனையும் பெற்றார். கடந்த மூன்று மாதங்களாக தவணையை செலுத்தவில்லை. இதேபோல், எங்கள் ஊரை சேர்ந்த விஷ்ணுகுமார், 29 என்பவர் பெயரில், 10க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கார்களை வாங்கியுள்ளார்.அவர் பெயரில், ஐந்து நிதி நிறுவனங்களில் ஏழுக்கும் மேற்பட்ட தனிநபர் உள்ளிட்ட, ரூ.1.5 கோடிக்கு மேல் கடன் பெற்றுள்ளார். எனது பெயரில் ரூ.70 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். இதுபோல், எங்கள் ஊரில் மட்டும், 20க்கும் மேற்பட்டோர் பெயரில் பல கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.கடந்த மூன்று மாதங்களாக, தவணை தொகையை செலுத்தாததால், நிதி நிறுவனத்தினர் எங்களை தவணை செலுத்த நிர்பந்திக்கின்றனர். எங்களுக்கு அந்தளவுக்கு வருவாய் கிடையாது. எங்கள் பெயரில் எப்படி இவ்வளவு கடன் கொடுத்தனர் என்பதே புரியவில்லை.தற்போது முரளி தலைமறைவாகி உள்ளார். எங்கள் கார்களை அடகு வைத்திருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். அவரது மொபைல்போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க, மனு அளித்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.இவருடன் ஐந்துக்கும் மேற்பட்டோர், இதேபோல் மோசடியில் பாதிக்கப்பட்டுள்ளதாக, எஸ்.பி., அலுவலகத்தில், புகார் மனு அளித்தனர்.
23-Feb-2025