ஆபாச சைகை; ஒருவர் கைது
கோவை எஸ்.என்.பாளையத்தை சேர்ந்தவர், 24 வயது இளம்பெண். இவர் வீட்டின் அருகே, கூலி வேலை செய்யும் முருகன், 54 குடியிருந்து வருகிறார். இளம்பெண் வீட்டில் தனியாக இருக்கும் போது, முருகன் தவறான விதத்தில் பேசியுள்ளார். இளம்பெண் தண்ணீர் பிடிக்க வரும் போது அருவருக்கத்தக்க வகையில், நடந்து கொண்டுள்ளார். பெண்ணின் பெற்றோர் ஆர்.எஸ்.புரம் போலீசாரிடம் புகார் அளித்தனர். வழக்கு பதிந்த போலீசார் முருகனை சிறையில் அடைத்தனர். வாலிபரிடம் நகை பறிப்பு
கணபதி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 34. இவருக்கு வாட்ஸ்அப் வாயிலாக சம்பத் என்பவர் பழக்கமானார். நேற்று முன்தினம் ராஜேந்திரன், டெக்ஸ்டூல் பாலத்தின் கீழ் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது வீடியோ காலில் வந்த சம்பத், ராஜேந்திரன் அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகைகளை கழட்டி, பத்திரமாக வைக்க அறிவுறுத்தினார். அவரும் நகைகளை கழட்டி வைத்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், ராஜேந்திரனின் நகைகளை பறித்துக் கொண்டு தப்பினர். ராஜேந்திரனின் புகாரின் பேரில், ரத்தினபுரி போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர். கார் மோதி முதியவர் பலி
கோவை பீளமேடு கோல்டுவின்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ், 75. நேற்று முன்தினம் தனது மொபட்டில், கோல்டுவின்ஸ் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால், அதிவேகமாக வந்த கார் ஒன்று, மோதி விட்டு நிற்காமல் சென்றது. ஜெயராஜ் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். புகையிலை விற்ற இருவர் கைது
கோவை பீளமேடு போலீசார், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மொபட்டில் இருந்த மூட்டையை, சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது. விசாரணையில், அவர்கள் பீளமேடு தண்ணீர் பந்தலை சேர்ந்த, முகமது அனீபா, 46, நவஇந்தியாவை சேர்ந்த பல்ராம், 44 எனத் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து, 417 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருட்கள், மொபட், மொபைல்போனை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்ற ஐவர் கைது
சிங்காநல்லுார் ஏ.ஜி.புதுார் அருகே, சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த மூவரிடம், போலீசார் நடத்திய சோதனையில், அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில், அவர்கள் சூலுார் காங்கேயம்பாளையத்தை சேர்ந்த ஜீவபாரதி, 22, பிரதீப், 26, சிங்காநல்லுாரை சேர்ந்த சுலைன்பாபு, 24 எனத் தெரிந்தது. அவர்களை சிறையில் அடைத்த போலீசார், அவர்களிடம் இருந்து, 1200 கிராம் கஞ்சா, பைக் பறிமுதல் செய்தனர்.இதேபோல், உப்பிலிபாளையம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த, நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்த தீபக்கிஷோர், 23, சூலுார் காங்கேயம்பாளையத்தை சேர்ந்த வரூண், 24 ஆகியோரை போலீசார் சிறையில் அடைத்தனர்.