கஞ்சா பறிமுதல்
சாய்பாபாகாலனி போலீசார் ரோந்து சென்றபோது, மேட்டுப்பாளையம் ரோடு, எம்.ஜி.ஆர்., மார்க்கெட் எதிரே சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த காரமடை, அண்ணா வீதியை சேர்ந்த சந்திரபாபுவை,34, பிடித்து விசாரித்தனர். அப்போது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்த அவரை சோதனையிட்டதில், 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 41 கிலோ புகையிலை பறிமுதல்
காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்ட் வெளியே நின்றிருந்த செல்வபுரம், வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சுப்ரமணியன்,46, என்பவரை காட்டூர் போலீசார் சோதனையிட்டனர். அவர் வைத்திருந்த பையில், 41 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர். பூட்டை உடைத்து திருட்டு
சித்தாபுதுார், கே.கே.நகரை சேர்ந்தவர் சாவித்திரி,50. ஆவாரம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், துாய்மை பணியாளராக உள்ளார். நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து, இரு மொபைல் போன்கள், ரூ.4,300 ரொக்கத்தை மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். தலையில் 'டமால்'
புதுக்கோட்டை மாவட்டம், அம்மன் குறிச்சியை சேர்ந்தவர் கிருஷ்ணா,29. தற்போது, சுந்தராபுரத்தில் தங்கி கூலி வேலைக்கு சென்றுவருகிறார். பேரூர் ரோட்டில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையில் இவருக்கும், சுபாஷ், சூர்யா ஆகியோருக்கும் இடையே சிகரெட் வாங்கும் விஷயத்தில் குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, இருவரும் கிருஷ்ணாவை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், பீர் பாட்டிலால் தலையில் தாக்கியுள்ளனர். காயமடைந்த கிருஷ்ணா, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெரிய கடைவீதி போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் தேடுகின்றனர். 9 சவரன் நகை திருட்டு
கோவை, சவுரிபாளையம் ரோடு, மீனா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹர சுப்ரமணியன்,29. கடந்த, 20ம் தேதி இவரது தாயாரும், மனைவியும் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். ஹரிஹர சுப்ரமணியனும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டு, அவரது அக்கா வீட்டில் தங்கிவிட்டார். மறுநாள் மாலை, 4:45 மணிக்கு ஹரிஹர சுப்ரமணியன் வீட்டுக்கு சென்றபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, 9 சவரன் தங்க நகை திருடுபோயிருந்தது. புகாரின் பேரில், பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர். 9 சவரன் நகை பறிப்பு
பீளமேடு, கே.ஆர்.புரம், இளங்கோ நகரை சேர்ந்தவர் ராஜலட்சுமி,32. நேற்று முன்தினம் இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்திறங்கிய, 20 முதல், 25 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் இருவர், வீட்டில் இருந்த ராஜலட்சுமியிடம் வாடகைக்கு வீடு கேட்பது போல் அனுகியுள்ளனர். திடீரென, ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஏழு சவரன் தாலிக்கொடி உட்பட, 9 சவரன் தங்க நகையை பறித்து தப்பினர். நகையை இழந்தவர் அளித்த புகாரின் பேரில், 'சிசிடிவி' காட்சி பதிவுகளை வைத்து, பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.