கோவை அரசு மருத்துவ கல்லுாரியில் 1,000 படுக்கையுடன் மருத்துவமனை தமிழக அரசுக்கு கலெக்டர் முன்மொழிவு
கோவை;கோவை, அவிநாசி ரோட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், 1,000 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை கட்டுவதற்கான முன்மொழிவு, மாவட்ட நிர்வாகத்தில் இருந்து தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.கோவை திருச்சி ரோட்டில் அரசு மருத்துவமனை செயல்படுகிறது; கோவை மாவட்டம் மட்டுமின்றி, அருகாமையில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த மக்களும் இம்மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். இம்மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும்போது, நோயாளிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு புறநோயாளிகளாக மட்டும், 7,500 பேர் வருகின்றனர். உள்நோயாளிகளாக, 2,250 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களுடன் உறவினர்கள் வருவதால், மருத்துவமனை வளாகத்துக்குள் எந்நேரமும் ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். இவர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.இதுதொடர்பாக, கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுாரி பாதுகாப்பு தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளோம். பராமரிப்பு, உள்கட்டமைப்பு வசதி மற்றும் உள்ளே வருவோரை கட்டுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு போன்ற அம்சங்களின் கீழ் விவாதிக்கப்பட்டுள்ளது. வரும், 30ம் தேதிக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை கேட்டிருக்கிறோம்.அரசு மருத்துவமனை வளாகத்தில் இடப்பற்றாக்குறை உள்ளது. இங்குள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் 'இன்டர் லிங்க்' இருப்பதால், சில பிரிவுகளை மருத்துவ கல்லுாரிக்கு மாற்ற முடியவில்லை. பழைய கட்டடத்தை இடிக்கலாம் என்றால், அங்கும் ஒரு பிரிவு செயல்படுகிறது. தற்போதுள்ள இட வசதிக்குள், உள்கட்டமைப்பை மேம்படுத்த முயற்சித்து வருகிறோம்.அதனால், அவிநாசி ரோடு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் புதிதாக டிபார்ட்மென்ட் உருவாக்கலாம். அதற்கேற்ற கட்டமைப்பு வசதி ஏற்படுத்த வேண்டுமென்கிற கருத்து எழுந்துள்ளது. மருத்துவ கல்லுாரி வளாகத்துக்குள், 1,000 படுக்கை வசதியுடன் மருத்துவமனை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், முன்மொழிவு சமர்ப்பித்திருகிறோம். எதிர்காலத்தில் அத்தகைய வசதி வரும்போது, சில பிரிவுகள் அங்கு செல்லும். இங்கு வரும் நோயாளிகள் கூட்டம் குறையும். கூடுதல் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தியுள்ளதால், கூடுதல் நோயாளிகள் வருகின்றனர். அதனால், வசதியை எவ்வாறு மேம்படுத்துவது என ஆலோசித்து வருகிறோம்.மழை பெய்யும் போது, மருத்துவமனை வளாகம் சேறாகி விடுகிறது; மழை நீர் வெளியேறுவதில்லை. இதற்கு காரணம், மருத்துவமனை வளாகத்தில் போடப்பட்டுள்ள ரோடு, மழை நீர் வடிகால் ரொம்ப பழசு. அதனால், எட்டு கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக ரோடு போடப்படும்; டெண்டர் நிலையில் இருக்கிறது. மழை நீர் வெளியேறினாலே, பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.