உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாடிவயல் யானைகள் முகாம் கட்டுமானம் 50 சதவீதம் நிறைவு

சாடிவயல் யானைகள் முகாம் கட்டுமானம் 50 சதவீதம் நிறைவு

தொண்டாமுத்தூர், : சாடிவயலில், புதியதாக கட்டப்பட்டு வரும் யானைகள் முகாம் பணி, 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.கோவை வனக்கோட்டத்தில், ஏழு வனச்சரகங்கள் உள்ளன. இதில், மிகப்பெரிய வனச்சரகமாக போளுவாம்பட்டி வனச்சரகம் உள்ளது. இங்கு, சாடிவயலில், 2012ம் ஆண்டு யானைகள் முகாம் துவங்கப்பட்டது. கும்கி யானைகள் வளர்க்கப்பட்டு, கோவை மாவட்டத்தில், காட்டு யானைகளை கட்டுப்படுத்த தேவைப்பட்ட இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், 2020ம் ஆண்டு நவம்பர் மாதம், இங்கிருந்த கும்கி யானை, டாப்சிலிப் கொண்டு செல்லப்பட்டது. அதன்பின், இங்கு மீண்டும் கும்கி யானைகள் கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில், சாடிவயலில், 8 கோடி ரூபாய் செலவில், யானைகள் முகாம் அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, யானைகள் முகாம் பணிக்கு, டெண்டர் விடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம், சாடிவயலில், 50 ஏக்கர் பரப்பளவில், யானைகளுக்கு ஷெட்- 18, குட்டைகள்- 3, கரோல் -2, போர்வெல், மாவுத் மற்றும் காவடிகளுக்கான விடுதிகள், சமையலறை, யானைகள் குளிக்க ஷவர், தண்ணீர் தொட்டி, யானைகள் மேய்ச்சலுக்கான பயிர் வளர்ப்பு, வாட்ச் டவர், கால்நடை மருந்தகம், முகாமை சுற்றிலும் யானைகள் அகழி, மின்வேலி உள்ளிட்டவை அடங்கிய, யானைகள் முகாம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு, வேகமாக நடந்து வருகிறது.வனத்துறையினர் கூறுகையில், 'இரண்டு மாதங்களுக்கு முன், சாடிவயல் யானைகள் முகாம் துவங்கப்பட்டது. தற்போது, பெரும்பாலான பணிகள் துவங்கப்பட்டு, 50 சதவீத பணிகள், நிறைவடைந்துள்ளன. அக்., மாதத்திற்குள் பணிகள் முழுவதும் முடிக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை