உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் திட்டத்திற்கு பவானி ஆற்றில் கிணறு அமைக்கும் பணி தீவிரம்

குடிநீர் திட்டத்திற்கு பவானி ஆற்றில் கிணறு அமைக்கும் பணி தீவிரம்

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு, விளாமரத்தூரில், 22.20 கோடி ரூபாய் செலவில், புதிய குடிநீர் திட்டத்துக்கு, கிணறு அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன. மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. நகர மக்களுக்கு, பவானி ஆற்றில் இருந்து, தினமும் ஒரு கோடியே, 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து, அதை சாமண்ணா சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்து, விநியோகம் செய்யப்படுகிறது.குன்னூரில் இருந்து வரும் கழிவு நீர், ஆலைகளின் கழிவு நீர், இரண்டும் சேர்ந்து, ஆற்றில் வருவதால், ஆற்றுத் தண்ணீரை நீண்ட நாட்களுக்கு இருப்பு வைக்க முடியாத நிலை இருந்து வருகிறது. அதனால் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு, நெல்லித்துறை ஊராட்சி விளாமரத்தூரில், பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும், புதிய குடிநீர் திட்டத்துக்கு, தமிழக அரசு, 22.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. விளாமரத்தூரில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை, சாமண்ணா நீரேற்று நிலையத்தில் சுத்தம் செய்து, பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. தற்போது விளாமரத்தூரில் பவானி ஆற்றில், ஆறு மீட்டர் அகலம், 13 மீட்டர் ஆழத்தில் கிணறு (இன்டேக் வெல்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆற்றில் அதிகபட்சமாக வெள்ளம் வந்த அளவைவிட, கூடுதலாக நான்கு அடி உயரம் வரை, கிணறு கட்டப்பட்டுள்ளது. அதன் மேல் மின் மோட்டார் அறை கட்டும் பணிகள் நடைபெற உள்ளன. மேலும் கரையில் இருந்து, கிணற்றுக்கு குழாய்கள் அமைக்கவும், பணியாளர்கள் நடந்து செல்வதற்கு, 43 மீட்டர் நீளத்திற்கு இணைப்பு பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.தற்போது விளாமரத்தூரில் கிணறு மற்றும் மின் மோட்டார் அறை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. குறிப்பிட்ட காலத்தில் பணிகள் செய்து முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்