பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப் பகுதியில், ரோட்டை ஒட்டியுள்ள பெரும்பாலான விளைநிலங்கள் அழிக்கப்பட்டு, வணிகப் பயன்பாட்டிற்காக மாற்றப்படுகிறது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், பல லட்சம் ெஹக்டேர் பரப்பில், தென்னை சாகுபடி உள்ளது. சில பகுதிகளில், காய்கறி, பயிறு வகைகள், பயிரிடப்பட்டு வருகின்றன.ஆனால், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள கிராமங்களில் பருவமழை பொய்த்ததால், விளைநிலங்கள் தரிசாக உள்ளன. இதனை நம்பி இனி பயனில்லை என்று விவசாயிகளும், விளைநிலங்களை விற்று விடுகின்றனர்.அதேநேரம், ரோட்டை ஒட்டிய விளைநிலங்கள், தொழிற்சாலைகள், வணிக்கடைகள், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பயன்பாட்டிற்காக விற்கப்படுவதும் அதிகரித்துள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தண்ணீர் பற்றாக்குறை, உர விலை உயர்வு, பருவ மழை பொய்த்தது, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமை, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், விவசாயத்தை கைவிடுகின்றனர்.அதிலும், பலர், தங்களது குழந்தைகளை உயர் கல்வி படிக்க வைப்பதுடன், விவசாயத்தை பற்றி சொல்லிக் கொடுப்பதில்லை.இதன் காரணமாகவே, ஆண்டுதோறும், பல நுாறு ஏக்கரில் விளைநிலங்கள், அழிக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக, நெடுஞ்சாலையை ஒட்டிய விளைநிலங்கள் அழிக்கப்பட்டு, வணிகப் பயன்பாட்டிற்காக மாற்றப்படுகிறது.பொள்ளாச்சி சுற்றுப் பகுதியில் பல நுாறு ஏக்கர் விளைநிலங்கள் காணாமல் போய்விட்டன. கிராமங்களிலும், வீட்டுமனை அமைக்கப்படுவதால், அங்கும் விளைநிலங்கள் அழிக்கப்படுகின்றன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.