ஒரே வங்கியில் கணக்கு துவக்க கூட்டுறவு ஊழியர் சங்கம் எதிர்ப்பு
அன்னுார்; பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் குறிப்பிட்ட வங்கியில் கணக்கு துவக்க கட்டாயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 550க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்கள் குறிப்பிட்ட வங்கியில், கணக்கு துவக்க, துணைப் பதிவாளர் (பால் வளம்) அறிவுறுத்தியுள்ளார்.இதையடுத்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் துணைப்பதிவாளருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் தொடக்கப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தற்போது ஒரு குறிப்பிட்ட வங்கியில் கோவை மாவட்டம் முழுமைக்கும் கணக்கு வைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறது.கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் 550க்கும் மேற்பட்ட தொடக்கப் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.கோவை மாவட்டத்தில் மிகக் குறைவான வங்கி கிளைகள் மட்டுமே உள்ள வங்கியால் சங்க உறுப்பினர்களுக்கு பால் பணம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படும் நிலை உள்ளது.எனவே, வங்கியில் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பணம் உடனுக்குடன் வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில், கோவை மாவட்டம் முழுமைக்கும் தற்போது நடைமுறையில் உள்ளதைப் போல் அந்தந்த வங்கியில் வரவு செலவு செய்ய அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.