மாநகராட்சி நகர பொறியாளர் சென்னைக்கு இடமாற்றம்
கோவை : கோவை மாநகராட்சி நகர பொறியாளர் அன்பழகன், சென்னை மாநகராட்சிக்கு நேற்று இட மாற்றம் செய்யப்பட்டார்.கோவை மாநகராட்சியில் இ-டெண்டர் முறையில் ஒப்பந்ததாரர்களுக்கு வளர்ச்சி பணிகள் ஒதுக்கப்படும். டெண்டர்களை, நகர பொறியாளர் தலைமையிலான குழுவினர் பிரித்து, ஒப்பந்ததாரர்களை இறுதி செய்வது நடைமுறை.வெள்ளலுார் கிடங்கில் தேங்கியுள்ள பழைய குப்பையை அழிக்க, ரூ.54.84 கோடிக்கு 'பயோமைனிங் - பேஸ் 2' டெண்டர் சமீபத்தில் கோரப்பட்டது.இதில், இரு நிறுவனங்கள் பங்கேற்றன. ஒரு நிறுவனம் திட்ட மதிப்பீடு தொகைக்கு குறைவாகவும், இன்னொரு நிறுவனம் அதிக மதிப்புக்கும், டெண்டர் கோரியதாக தகவல் பரவியது.டெண்டரை இறுதி செய்வதில், மாநகராட்சி அதிகாரிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டது. ஒப்பந்த நிறுவனத்தை இறுதி செய்யாமல், கிடப்பில் போடப்பட்டது.டெண்டரை கேன்சல் செய்து விட்டு, மறுஏலம் கோர அறிவுரை வழங்கப்பட்டது. இதற்கு என்ன முடிவெடுப்பதென தெரியாமல், பொறியியல் பிரிவு அதிகாரிகள் திணறினர்.இச்சூழலில், பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த வழக்கு விசாரணையில், 'பயோமைனிங்' திட்டம் செயல்படுத்தி, பழைய குப்பை அழிக்கப்படும்; இதற்கான நடவடிக்கை இரண்டு மாதத்தில் துவங்கும் என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.இன்னும் டெண்டர் இறுதி செய்து, ஒப்பந்தமே முடிவு செய்யாத நிலையில், 'பயோமைனிங்' பணி எப்போது துவங்கும் என்கிற கேள்வி எழுந்தது. இதற்கிடையே, மாநகராட்சி நகர பொறியாளராக இருந்த அன்பழகன், சென்னை மாநகராட்சிக்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அதன்பின், அரசின் உத்தரவு நகல் மாநகராட்சிக்கு வந்திருக்கிறது. அதில், இட மாறுதல் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது, பொறியியல் பிரிவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.