உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மொபைல் செயலி உருவாக்குகிறது மாநகராட்சி இனி கொட்டோ கொட்டென்று கொட்டும் வரி

மொபைல் செயலி உருவாக்குகிறது மாநகராட்சி இனி கொட்டோ கொட்டென்று கொட்டும் வரி

கோவை:கோவையில் ஒரு தொழில் நிறுவனம் கூட விடுபடாமல் இருக்க, வீதி வீதியாகச் சென்று கள ஆய்வு செய்து பதிவேற்றம் செய்வதற்காக, பிரத்யேகமாக மொபைல் செயலி உருவாக்குகிறது, மாநகராட்சி நிர்வாகம்.கோவை நகரப்பகுதியில் எந்தவொரு தொழில் நிறுவனம் நடத்தினாலும், மாநகராட்சியில் கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் (trading licence) பெற வேண்டும்.இதில், 450க்கும் மேற்பட்ட தொழில்கள் வகைப்படுத்தப்பட்டு, உரிமக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்கு, ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்; வார்டு சுகாதார ஆய்வாளர்கள் பரிசீலித்து, அத்தொழிலுக்கான கட்டணம் நிர்ணயிப்பர். அத்தொகையை செலுத்தியதும், உரிமம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.சமீபத்தில் நடத்திய ஆய்வில், சொத்து வரி செலுத்தும் நிறுவனங்கள் மற்றும் தொழில் உரிமம் பெற்றுள்ள நிறுவனங்கள் விபரங்களை ஒப்பிட்டு பார்த்தபோது, தொழில் உரிமமே பெறாமல் பலரும் நிறுவனங்கள் நடத்துவது தெரியவந்தது.அதனால், தனியார் நிறுவனம் மூலம் ஊழியர்கள் நியமித்து, வார்டுக்கு ஒருவர் பணியமர்த்தப்பட்டு, ஒரு வீதி கூட விடுபடாத அளவுக்கு களப்பணி சென்று, அனைத்து விதமான தொழில் நிறுவனங்களையும் பதிவு செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழக அரசு உத்தரவுப்படி, ஏற்கனவே வகைப்படுத்தியுள்ள தொழில்கள் மற்றும் தொழில்நிறுவனங்கள் பட்டியலுடன் மொபைல் செயலி உருவாக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.அதில், தொழில் வரி வசூலிப்பதற்கான வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. தற்போது வருவாய் பிரிவு மூலமாக தொழில்வரி வசூலிக்கப்படுகிறது.மொபைல் செயலியில், அனைத்து விதமான கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும்போது, ஒவ்வொரு நிறுவனத்திலும் பணிபுரியும் ஊழியர்கள் விபரம், மாநகராட்சிக்கு தெரியவரும்; அவர்களிடம் இருந்தும் விடுபடாமல் தொழில் வரி வசூலிக்க முடியும் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மொபைல் செயலி உருவாக்கும் பணியில், மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தொழில் உரிமம் பெற்றவர்கள் குறைவு

மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் கூறுகையில், 'கோவை மாநகராட்சியில் வணிக வரி விதிப்புகள் மற்றும் தொழிற்சாலை வரி விதிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், தொழில் உரிமம் பெற்றிருப்பவர்கள் குறைவாக இருக்கின்றனர். அனைத்து விதமான தொழில்களுக்கும் உரிமம் வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது.தனியார் நிறுவன ஊழியர்கள் நியமித்து, வீதி வீதியாகச் சென்று ஆய்வு செய்யப்படும். அவ்விபரங்கள் மொபைல் செயலியில் பதிவேற்றி, தொழில் உரிமம் வழங்கப்படும். அவ்வாறு உரிமம் பெற்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம், தொழில் வரி வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை