90ஸ் கிட்ஸ்களுக்கு மாநகராட்சி அறிவிப்பு: பிறப்பு சான்று பெற டிச., 31 தாங்க கடைசி
கோவை;கோவையில், 2000ம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்கள், மாநகராட்சியில் பதிவு செய்து பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான அவகாசம், டிச., 31ல் முடிகிறது. இதுவரை சான்றிதழ் பெறாதவர்கள், டவுன்ஹாலில் உள்ள பிரதான அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மாநகர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தால், அருகாமையில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, 'ஆன்-லைன்' மூலம் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. 2000க்கு முன் பிறந்தவர்கள் கூட பிறப்பு சான்று பெறாமல் இன்னும் பலர் இருக்கின்றனர். வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பாஸ்போர்ட் எடுக்க முற்படும்போது, பிறப்பு சான்றிதழ் அவசியம் கேட்பதால், மாநகராட்சி அலுவலகத்தை நாடுகின்றனர்.மாநகராட்சி அலுவலகத்தில், 15 ஆண்டுகள் வரை மட்டுமே பதிவேடு பராமரிக்கப்பட்டு, பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும். தமிழக அரசு காலஅவகாசம் வழங்கியதால், 2000ம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்களுக்கு இதுநாள் வரை பிறப்பு சான்று வழங்கப்படுகிறது. இப்போது, வரும் டிச., 31க்குள் விண்ணப்பித்து, சான்று பெற்றுக்கொள்ள கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பின் அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என எச்சரிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, மாநகராட்சி சுகாதாரப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு:பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச்சட்டம் 2000 விதிகளின் படி, 2000ம் ஆண்டுக்கு முந்தைய பிறந்த குழந்தைகள் பெயரை, 2024 டிச., 31க்குள் பதிவு செய்ய வேண்டும். தவறினால் அவர்களது பெயரை, நிரந்தரமாக பதிவு செய்ய இயலாது. ஏற்கனவே தமிழக அரசால், 25 ஆண்டுகள் காலநீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது; இனி அவகாசம் நீட்டிக்கப்படாது.குடும்ப உறுப்பினர்களோ அல்லது உறவினர்களோ பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்யாமல் இருந்தால், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு சென்று பிறப்பு - இறப்பு பதிவாளரை சந்தித்து சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். நடப்பாண்டு பிறக்கும் குழந்தைகளுக்கு ஓராண்டுக்குள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்று குழந்தையின் பெயரை பதிவு செய்து, சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.