ஐஸ்வர்யா ரெசிடென்சிக்கு மாநகராட்சி நோட்டீஸ்
கோவை:கோவையில் குடியிருப்பு கட்டுவதற்கு வரைபட அனுமதி வாங்கி விட்டு, மூன்று தளங்களுடன், 'ஐஸ்வர்யா ரெசிடென்சி' என்ற பெயரில் வணிக நோக்கத்துடன் விடுதி கட்டியிருப்பதால், மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது.கோவை - அவிநாசி ரோட்டில் கோல்டுவின்ஸ் பகுதியில் இருந்து வீரியம்பாளையம் செல்லும் ரோட்டில், துரைசாமி நகர் - ராமலட்சுமி நகரில், 'ஐஸ்வர்யா ரெசிடென்சி' என்கிற பெயரில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் விடுதி செயல்படுகிறது.இவ்விடுதி, கட்டுமான விதிகளுக்கு முரணாக கட்டப்பட்டுள்ளது; இரவு நேரங்களில் விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுகின்றன. மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது என அப்பகுதி மக்கள், கலெக்டர் கிராந்திகுமாரிடம் மனு கொடுத்தனர். அதை விசாரித்த அவர், மாநகராட்சிக்கு பரிந்துரைத்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், அவ்விடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.மாநகராட்சி நிர்வாகம், உள்ளூர் திட்டக்குழுமம் மற்றும் நகர ஊரமைப்புத்துறையில் பெற்றுள்ள கட்டட வரைபடத்தை ஆய்வு செய்ய நகரமைப்பு பிரிவினருக்கு கமிஷனர் அறிவுறுத்தினார். வரைபடத்தை ஆய்வு செய்த நகரமைப்பு பிரிவினர் அதிர்ச்சி அடைந்தனர்.ஏனெனில், குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி பெற்று விட்டு, வணிக நோக்கத்துடன், விதிகளுக்கு முரணாக, கூடுதலாக, 1616.7 சதுர மீட்டர் பரப்பளவுக்கு தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் விடுதி கட்டப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்து, மாநகராட்சி அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது:குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட வரைபடத்துக்கு மாறாக, வணிக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் விதிமீறல்களை திருத்தி, கட்டட அனுமதி கோரி, இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தவறும் படசத்தில், அனுமதிக்கு மாறான கட்டடம் என முடிவு செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.கட்டட அனுமதிக்கு மாறாக, 1616.7 சதுர மீட்டர் பரப்பளவுக்கு வணிக நோக்கத்துடன் கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. முன்பக்க திறவிடம் விதிகளுக்கு முரணாக, 2.4 மீட்டர் மட்டுமே விடப்பட்டுள்ளது. பக்கத்திறவிடங்கள் விதிகளுக்கு முரணாக, 2 மீட்டர் மற்றும், 3 மீட்டர் விடப்பட்டுள்ளது. பின்பக்க திறவிடம் விதிகளுக்கு முரணாக, 1.9 மீட்டர் விடப்பட்டுள்ளது.இவ்வாறு, நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, ''ஐஸ்வர்யா ரெசிடென்சி விடுதியில் விதிமீறல் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர். ''கட்டட அனுமதிக்கு மாறாக விடுதி கட்டப்பட்டு இருக்கிறது; குறிப்பிட்ட அவகாசத்துக்குள் விதிமீறலை சரி செய்யாவிட்டால், 'லாக் அண்டு சீல்' அல்லது, விதிமுறைக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.