உள்ளூர் செய்திகள்

கிரைம் செய்திகள்

பெண்ணிடம் செயின் பறிப்பு

சூலுார் அடுத்த முத்துகவுண்டன் புதூரை சேர்ந்த சங்கர் மனைவி உதயா, 38. இவர் செங்கோடகவுண்டன் புதூர் ரோட்டில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு கடையை திறந்துள்ளார். அப்போது பைக்கில் இருவர் வந்துள்ளனர். அதில் ஒரு நபர் இறங்கி சிகரெட் வாங்கி சென்றார். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்து, பால் பாக்கெட் மற்றும் பிஸ்கட் வேண்டும் என கேட்டுள்ளார். பிரிட்ஜில் இருந்து பாலை எடுக்கும் போது, உதயா அணிந்திருந்த, 4 சவரன் கொண்ட இரு தங்க செயின்களை அந்நபர் பறித்துக்கொண்டு, பைக்கில் தயாராக இருந்த நபருடன் தப்பி சென்றார்.இதுகுறித்து, அவர் சூலுார் போலீசாரிடம் புகார் அளித்தார். எஸ்.ஐ., ராஜேந்திர பிரசாத் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தார். கண்காணிப்பு காமிரா பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

தொழிலாளி மயங்கி விழுந்து பலி

மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்தவர் ரங்கராஜ், 45. மூட்டை தூக்கும் தொழிலாளி. இவருக்கு அன்னபூரணி என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். மனைவி மற்றும் மகள்கள் திருப்பூரில் வசித்து வருகின்றனர். ரங்கராஜ், மேட்டுப்பாளையத்தில் தங்கி வேலை செய்கிறார். விடுமுறையின் போது திருப்பூர் சென்று குடும்பத்தை பார்த்து வருவார்.ரங்கராஜ் பவானி ஆற்றில் குளிப்பது வழக்கம். அதேபோல் நேற்று முன் தினம் மாலை பவானி ஆற்றில் குளித்துவிட்டு, மீண்டும் கரைக்கு வந்தவர், அங்கேயே மயங்கி விழுந்து விட்டார். அருகில் உள்ளவர்கள், அவர் எந்தவித அசைவும் இன்றி இருந்ததால், அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் தெரிவித்தனர். இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

----ஆறு கிலோ கஞ்சா பறிமுதல்

கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சோமனூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அதில், சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த மூவரிடம் விசாரித்தனர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணையன் மகன் கோபி, 27, குமார் மகன் சக்திவேல், 26, முருகன் மகன், மகாராஜன், 22 என்பது தெரிந்தது. அவர்கள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த, 6 கிலோ, 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில்,' ஜனவரி மாதம் முதல் இதுவரை, போதை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த, 77 பேர் மீது, 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து, 98.58 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா விற்பவர்கள் குறித்து விபரம் தெரிந்தால் போலீசாருக்கு உடனடியாக பொதுமக்கள் தகவல் அளிக்கவேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ