பைக் டெலிவரி தாமதம்: மாணவனுக்கு இழப்பீடு
கோவை:பைக் டெலிவரிக்கு காலதாமதம் செய்ததால், மாணவனுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.கோவை அருகேயுள்ள வீரகேரளத்தை சேர்ந்தவர் வருணன். மருத்துவ கல்லுாரி மாணவரான இவர், ராயல்என்பீல்டு பைக் வாங்குவதற்காக, மருதமலை ரோட்டிலுள்ள ேஷாரூமில், 2023, பிப்., 5ல், 10,000 ரூபாய் செலுத்தி, முன் பதிவுசெய்தார். 24 மணி நேரத்தில் பைக் டெலிவரி தேதி உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தனர். ஆனால், இரண்டு மாதங்களாகியும், பைக் டெலிவரி தொடர்பாக எந்த பதிலும் வரவில்லை. ஏற்கனவே செலுத்திய முன் தொகையும், திருப்பி தரப்படவில்லை.இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வருணன் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரர் செலுத்திய தொகை, 10,000 ரூபாய் திருப்பி கொடுப்பதோடு, மன உளைச்சலுக்கு இழப்பீடு மற்றும் செலவு தொகை, 15,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.