| ADDED : மே 17, 2024 01:04 AM
கோவை;அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை செயல்பாடுகள், விறுவிறுப்பாக நடந்துவரும் சூழலில், அதற்கான வழிகாட்டுதல் இதுவரை வெளியிடாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், 164 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு பணி நடந்து வருகிறது. வரும், 20ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 28ம் தேதி முதல் கலந்தாய்வு துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.வழக்கமாக, விண்ணப்ப பதிவு பணிகள் துவங்கும் முன், சேர்க்கை வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்படும். அதன்படியே, கல்லுாரி முதல்வர்கள் கவுன்சிலிங் செயல்பாடுகளை மேற்கொள்வர். நடப்பாண்டில், தற்போது வரை சேர்க்கை செயல்பாடுகள் வெளியிடப்படவில்லை.அரசு கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறுகையில், 'கடந்தாண்டுகளில் சேர்க்கை செயல்பாட்டில் நிறைய மாற்றங்கள் இருந்தன. நடப்பாண்டில், ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பதை, முன்கூட்டியே அறிந்தால் தான் அதற்கேற்ப செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும். இதுவரை கல்லுாரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடவில்லை' என்றார்.