| ADDED : மே 09, 2024 10:59 PM
அன்னுார்:ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி செயலரை பணியில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சி செயலராக பணியாற்றி வரும் சந்தோஷம், அந்த மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சியில் நிதி ஒதுக்கீட்டை எதிர்நோக்கி மேற்கொள்ளப்பட்ட திட்ட பணிகள் தொடர்பாக, அவ்வலுவலகத்தின் முன்னாள் மாவட்ட ஊராட்சி செயலர் மற்றும் ஊழியர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.கிராமங்களில் பொதுமக்களின் நன்மை கருதி அத்தியாவசிய பணிகள் செய்யப்படுகிறது. அத்தியாவசியத்தேவையை கருதி செய்யப்பட்ட பணிகளுக்காக கிரிமினல் நடவடிக்கை எடுத்தது கண்டிக்கத்தக்கது. அரசு இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு காவல் துறை நடவடிக்கை கைவிட செய்ய வேண்டும்.ஊழியர்கள் நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் சந்தோஷத்தை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்கத்தின் மாநில செயலாளர் செந்தில்குமார் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். நிர்வாகிகள் பிரபுராஜ், சாமிநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.