| ADDED : மே 06, 2024 10:41 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, விவசாயிகளுக்கு எலுமிச்சை பழத்தில் விண்பதியம் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழ்நாடு வேளாண் பல்கலை இறுதி ஆண்டு தோட்டக்கலை மாணவியர், கிராம தங்கல் திட்டத்தில் ஆழியாறில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். புளியங்கண்டி பகுதி விவசாயிகளுக்கு எலுமிச்சை விண்பதியம் செயல்முறை குறித்து பயிற்சி அளித்தனர்.மாணவியர் கூறியதாவது:விண்பதியம் செய்வதால், ஒரே தாய் மரத்தின் வாயிலாக பல எலுமிச்சை மரக்கன்றுகளை உற்பத்தி செய்யலாம். மேலும், மிகவும் குறைந்த நாட்களில் அதாவது, 45 நாட்களிலே புதிய மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய முடியும்.மாறாக, சாதாரண மரக்கன்றுகளில் காய் பிடிப்பதற்கு, 3 - 4 ஆண்டுகள் ஆகின்றன. விண்பதியம் செய்வதால் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டிலேயே மகசூல் பெறலாம் என செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.செயல் விளக்கமாக, நன்கு காய்க்கக்கூடிய ஒரு மரத்தினை தாய் மரமாக தேர்ந்தெடுத்து, அதில் பென்சில் தடிமன்னுள்ள கிளையை தேர்வு செய்து, ஒரு சிறு பகுதியின் தோள்பட்டையை கூர்மையான கத்தியை கொண்டு உறித்து எடுக்க வேண்டும்.அதன் மேல், ஸ்பாகனம் பாசி அல்லது கோகோபீட்டினை வைத்து பாலித்தீன் தாள்களை கொண்டு இறுக்கமாக கட்ட வேண்டும். ஈரப்பதத்தினை தக்க வைக்க அவ்வப்போது தண்ணீர் தெளிக்க வேண்டும்.இதன் வாயிலாக, 45 நாட்களில் வேர்கள் முளைப்பு விடுகின்றன. அதன்பின் பதியம் செய்த பகுதியை தாய் மரத்தில் இருந்து நீக்கி வேறு இடத்தில் நடவு செய்யலாம்.இவ்வாறு, கூறினர்.